24 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் ஆஸ்திரேலிய அணி வரலாற்றுச் சாதனை

0
161
Australia Test Series Victory vs Pakistan

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் சற்று முன்னர் நிறைவு பெற்றது. 1998க்கு பின்னர் சுமார் 24 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1998 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை அதன் மண்ணில் வைத்து 1-0 என்கிற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. தற்பொழுது அதேபோல 24 வருடங்கள் கழித்து மீண்டும் பாகிஸ்தான் அணி அதனுடைய சொந்த மண்ணில் வைத்து 1-0 என்கிற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி கண்டுள்ளது.

- Advertisement -
டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிவடைந்தது. வெற்றியை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 393 ரன்கள் குவித்த நிலையில் பாகிஸ்தான் அணி 268 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 227 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்துள்ளது. இதனால் 115 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி அடைந்துள்ளது.

இதற்கு முன்னர் 1959ஆம் ஆண்டு லாகூரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது. லாகூரில் நடந்த இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம், சுமார் 62 ஆண்டுகள் கழித்து மீண்டும் லாகூரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
தொடர் வெற்றிகளை குவித்து வரும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்

இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் வெற்றி, தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்து முடிந்துள்ள டெஸ்ட் தொடரில் வெற்றி என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறார்.

ஆசிய மண்ணில் இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய அணி 2011 ஆம் ஆண்டு இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. தற்பொழுது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆசிய மண்ணில் ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் வெற்றிபெற்று மற்றொரு சாதனையும் படைத்துள்ளது. அதேபோல பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய கேப்டன்களாக ரிச்சி பெனாய்ட் (1959/60) மற்றும் மார்க் டெய்லர் (1998/99) மற்றும் இருந்து வந்தனர். தற்பொழுது அவர்களுடன் பேட் கம்மின்ஸ் (2022*) 3வது வீரராக இணைந்துள்ளார்