இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற இரண்டு தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லி, இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் டிராபி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றும் இது புகழ்பெற்ற மற்றொரு தொடருக்கு நிகராக இருப்பதாகவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எவ்வளவு வரவேற்பு பெற்றதோ அதேபோல தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இரண்டு நாட்டு மக்களிடையேயும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக 2018-2019 மற்றும் 2020- 2021 ஆகிய ஆண்டுகளில் விராட் கோலி மற்றும் ரகானே தலைமையில் இந்திய அணி இந்த டெஸ்ட் தொடர்களை வென்றதைத் தொடர்ந்து இது ரசிகர்களிடையே மேலும் சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி பார்டர் கவாஸ்கர் டிராபி ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு இணையான வணிக மதிப்பை கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இவை இரண்டுமே ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் காலண்டரில் பெரிய வரவேற்பை பெறும் இரண்டு தொடர்களாகும்.அபாரமான மக்கள் கூட்டங்களும், அதிக பார்வையாளர்களைக் கொண்ட தொலைக்காட்சி பார்வைகளும் இந்த தொடருக்கு முக்கிய சிறப்பம்சம் சேர்க்கின்றன. இந்தியாவிலிருந்து டிக்கெட்டுகளின் விலை முந்தைய கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஆறு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மைதானங்களை எடுத்துக் கொண்டால் இங்குள்ள ஒவ்வொரு சின்ன சின்ன மைதானங்களும் தனித்தனியான ஆடுகள பண்புகளை கொண்டு இருக்கின்றன. இதுவே இந்த தொடரை மேலும் சுவாரசியமாக்குகிறது. மேலும் சமீபத்திய வருடங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பகல் இரவு டெஸ்ட் போட்டியும் இதற்கான சுவாரசியத்தை கூட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:தீவு வாங்க முடியாது.. இனி ஐபிஎல்-ல் பாரின் வீரர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்காது – அஸ்வின் உறுதியான தகவல்
ஏற்கனவே இரண்டு இந்திய கேப்டன்கள் தலைமையில் பார்டர் கவாஸ்கர் டிராஃபியை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் தற்போது அடுத்ததாக ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே தற்போது வலுவாக இருப்பதால் இந்த தொடர் ரசிகர்களுக்கு நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.