“அயர்லாந்துக்கு தான் நன்றி சொல்லணும்.. எங்களோட வெற்றிக்கு காரணமே அவங்க தான்” – பென் ஸ்டோக்ஸ் பேட்டி!

0
3874

இந்த தருணத்தில் நாங்கள் அயர்லாந்து அணிக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று பேட்டியளித்துள்ளார் பென்ஸ் ஸ்டோக்ஸ்

டி20 உலக கோப்பை தொடரின் எட்டாவது எடிசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் இறுதிப் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்றது.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிய இந்த இறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசியது. பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தி பாகிஸ்தான் அணியை 20 ஓவர்களில் எட்டு விக்கெட் வீழ்த்தி 137 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.

பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள், கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்துக்காக பந்துவீச்சில் சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றலாம் என்ற முனைப்பில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 19 ஓவர்கள் முடிவில் எட்டி இரண்டாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்காக இறுதி வரை ஆட்டம் இழக்காமல் போராடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த பென் ஸ்டோக்ஸ், அயர்லாந்து அணியுடன் ஏற்பட்ட தோல்வியை திருப்புமுனையாக குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர் பேசுகையில், “உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடரில் சிறந்த அணி தங்களது தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டு அடுத்த முறை அதை திரும்பவும் செய்யாமல் இருக்க பயிற்சிகள் மேற்கொள்ளும்.

அந்த வகையில் அயர்லாந்து அணியுடன் நாங்கள் பெற்ற தோல்வி எங்களை சுதாரிக்க வைத்தது. அந்த தவறில் இருந்து கற்றுக் கொண்டோம். அதன் பிறகு எங்களுக்கு பின்னடைவு இல்லை. தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வந்தோம். இந்த தருணத்தில் நாங்கள் அயர்லாந்து அணிக்கு தான் நன்றியை கூற வேண்டும்.

தொடரின் ஆரம்பத்திலேயே நாங்கள் தோல்வியை சந்தித்து, அதை சரியாக கண்டுபிடித்து விட்டதால்தான் இத்தகைய வெற்றி சாத்தியமாகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சக அணி வீரர்களும் துவண்டு விடாமல் தங்களது முழு பங்களிப்பை கொடுத்தனர். இந்த தருணத்தில் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை கூட கடமைப்பட்டிருக்கிறேன். “என்றார்.