சர்ச்சை போட்டி.. இலங்கையை 41ஓவரில் வீழ்த்தியது பங்களாதேஷ்.. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு கடும் போட்டி!

0
2048
Srilanka

இன்று நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற சர்ச்சையான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று இருக்கிறது. இலங்கை அணியில் அஞ்சலோ மேத்யூசை டைம் அவுட் முறையில் பங்களாதேஷ் வெளியேற்றி இருந்தது சர்ச்சையாக மாறியது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்று பங்களாதேஷ் அணி பீல்டிங் செய்ய முடிவு செய்ய, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு பதும் நிஷாங்கா 41, சதிரா 41, தனஞ்செயா 34, தீக்ஷனா 22 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

இன்னொரு முனையில் நின்று மிகச் சிறப்பாக விளையாடிய சரித் அசலங்கா 105 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் எடுத்து இலங்கை அணி ஓரளவுக்கு நல்ல நிலைக்கு எடுத்துச் சென்று இறுதியில் ஆட்டம் இழந்தார்.

இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் சேர்த்தது. தன்ஷிம் ஹசன் பங்களாதேஷ் தரப்பில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் தன்ஷித் 9, லிட்டன் தாஸ் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷகிப் அல் ஹசன் மற்றும் நஜீபுல் சாந்தோ இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஷகிப் 65 பந்துகளில் 82 ரன்கள், நஜீபுல் சாந்தோ 101 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை எளிதாக்கி ஆட்டம் இழந்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த மகமதுல்லா 22 ரஹீம் 10, மெகதி ஹசன் மிராஸ் 3, ரன்கள் எடுத்து வெளியேற திடீரென ஆட்டத்தில் ஒரு பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் ஹ்ரிடாய் 15, தன்ஷிம் ஹசன் 9 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிகரமாக 41.1 ஓவரில் முடித்து வைத்தார்கள். பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில், இந்த உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது.

தற்பொழுது இரு அணிகளும் தலா எட்டுப் போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் உடன் இருக்கின்றன. ரன் ரேட் அடிப்படையில் பங்களாதேஷ் அணி ஏழாவது இடத்திலும் இலங்கை அணி எட்டாவது இடத்திலும் இருக்கிறது.

ஏழு போட்டியில் இரண்டு வெற்றி உடன் நெதர்லாந்தும், ஏழு போட்டியில் ஒரு வெற்றி உடன் இங்கிலாந்தும், 9 மற்றும் 10வது இடங்களில் இருக்கின்றன.இதன் காரணமாக பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்க, இந்த நான்கு அணிகளுக்கு இடையே தற்பொழுது கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் வரும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.