இந்திய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் உடைந்த கையோடு முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா வீசும் பவுன்சர்களை சந்திக்காததற்கு கடவுளுக்கு நன்றி என இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் கூறியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இறுதி நாளில் உடைந்த கையுடன் அணிக்காக களம் இறங்கி அனைவரது பாராட்டையும் கிறிஸ் வோக்ஸ் பெற்றார். ஆனால் அவர் ஒரு பந்து கூட சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட் நிலை
நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இதே கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் கால் பாதத்தில் காயமடைந்து விளையாட முடியாமல் வெளியேறினார். பிறகு அதே காயத்துடன் வந்து அரை சதம் அடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவரால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியை விளையாட முடியவில்லை.
அதே சமயத்தில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் அடித்த பந்தை நேராக ஓடிச் சென்று தடுக்கும் போது தோள்பட்டையில் காயமடைந்து மேற்கொண்டு பந்து வீசாமல் கிறிஸ் வோக்ஸ் களத்தை விட்டு வெளியேறி விட்டார். இதைத் தொடர்ந்து தோல்வியிலிருந்து அணியை காப்பாற்றுவதற்காக இரண்டாவது இன்னிங்ஸ் போது உடைந்த கையுடன் களத்திற்கு வந்தார்.
கடவுளுக்கு நன்றி
இதுகுறித்து கிறிஸ் வோக்ஸ் பேசும் பொழுது “இறுதியில் மொத்தமாக நடந்த விஷயங்கள் கசப்பானது. நான் ஒரு பந்தை எதிர்கொள்வது எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், நான் அந்த பந்தை சரியாக தடுத்து விளையாடி இருக்க முடியுமா, ஒரு ஓவர் முழுமையாக விளையாடி இருக்க முடியுமா, ஒரு ரன் அல்லது பவுண்டரி அடித்திருக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடிந்திருக்காது”
இதையும் படிங்க : அஸ்வின் மாதிரி குல்தீப் யாதவ் இதை செஞ்சா மட்டுமே கம்பீர் இந்திய அணியில் சேர்ப்பார் – ராபின் உத்தப்பா பேட்டி
“இந்த விஷயத்தில் கடவுளுக்கு மிகவும் நன்றி. 90 மைல் வேகத்தில் வீசப்படும் அதிவேக பவுன்சரை நான் ஒரு கையால் தவறான திசையில் விளையாடுவதில் இருந்து தப்பித்தேன். நான் விளையாடி இருந்தால் நிச்சயம் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணாவிடம் இருந்து பவுண்சர்களை சந்திக்க வேண்டி இருந்திருக்கும். உண்மையில் அவை பதட்டமான உணர்வுகள்” என்று கூறியிருக்கிறார்.






