இன்று டிஎன்பிஎல் எட்டாவது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தனியாக அஸ்வின் பேட்டிங்கில் திண்டுக்கல் அணிக்காக போராட, சேப்பாக் அணி நான்கு ஓவர்களில் போட்டியை முடித்து வெற்றி பெற்றது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சேப்பாக் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. மழையின் காரணமாகஏழு ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. அணியில் மூன்று வீரர்கள் இரண்டு ஓவர்கள் பந்து வீசலாம் என்று கொடுக்கப்பட்டிருந்தது. எனவே நான்கு பந்துவீச்சாளர்கள் வந்து வீசினாலே போதும் என்கின்ற நிலை இருந்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 7 ஓவர்கள் போட்டியில் அதிரடியாக விளையாட போய் திண்டுக்கல் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை கொடுத்து கொண்டே இருந்தார்கள். ஒரு பக்கம் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் தனியாக நின்று பேட்டியில் போராடினார்.
ஏழு ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஏழு ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 20 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 225 ஸ்ட்ரைக் ரேட்டில் 45 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக விமல் குமார் 7 பந்தில் 12 ரன்கள் எடுத்தார். சேப்பாக் கில்லிஸ் அணித் தரப்பில் அபிஷேக் தன்வார் மற்றும் கணபதி பெரியசாமி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்கு சந்தோஷ் குமார் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். ஆனால் நாராயணன் ஜெகதீசன் 14 பந்தில் 32 ரன்கள், கேப்டன் பாபா அபராஜித் 14 பந்தில் 31 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுக்க 4.5 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : WCL 2024: பரிசுத்தொகை மற்றும் விருதுகள் விவரம்.. இந்தியாவுக்கு ஜாக்பாட்.. தோற்ற பாகிஸ்தான் அணிக்கும் பெரிய தொகை
இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் 1.5 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுத் தந்தார். அதே சமயத்தில் பேட்டிங்கில் தனி ஆளாக போராடி அணியை முடிந்த வரையில் நல்ல ஸ்கோருக்கு கொண்டு வந்தார். ஐபிஎல் தொடரில் அடுத்து வருகின்ற மெகா ஏலத்தில் ஒரு ஆப் ஸ்பின்னர் ஆக மட்டும் இல்லாமல் பவுலிங் ஆல் ரவுண்டராகவே ரவிச்சந்திரன் அஸ்வினை அணிகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.