18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவில் முக்கியமான போட்டியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடிய போட்டி இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆடுகளம் ஏற்கனவே சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் சிஎஸ்கே மூன்று தரமான சுழற் பந்துவீச்சாளர்களோடு களமிறங்கியது. இந்த சூழ்நிலையில் இன்னிங்ஸ் தொடங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ரிக்கல்டன் 13 ரன், வில் ஜாக்ஸ் 11 ரன்னில் வெளியேறினார்கள்.
அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஜோடி ஓரளவு நன்றாக விளையாடி மும்பை அணியை கரை சேர்த்தனர். சூரியகுமார் 29 ரன், திலக் வர்மா 31 ரன்னில் வெளியேற, இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய முன்னாள் சிஎஸ்கே வீரர் தீபக் சகார் 15 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸ் என 28 ரன்கள் குவித்தார். இதனால் மும்பை அணி இன்னிங்ஸ் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரச்சின் ரவிந்த்ரா ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாட, மற்றொரு துவக்க வீரர் திருப்பாதி 2 ரன்னில் நடையை கட்டினார். அதற்குப் பிறகு கேப்டன் கெய்க்வாட் களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 56 ரன்கள் எடுத்திருந்தபோது அறிமுகவீரர் விக்னேஷ் புத்தூர் பந்துவீச்சில் வெளியேறினார்.
இதையும் படிங்க:10 கோடிக்கு நான் வொர்த்.. 4 விக்கெட்.. முன்னணி தலைகளை வீழ்த்தி ஆட்டத்தையே மாற்றிய நூூர் அகமது.. ஐபிஎல் 2025
அதற்குப் பின்னர் களம் இறங்கிய சிவம் தூபே 9 ரன் மற்றும் தீபக் ஹூடா 3 ரன்னில் விக்னேஷ் புத்தூரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்கள். தனது முதல் போட்டியில் விளையாடினாலும் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கேவிற்கு சற்று பயத்தை ஏற்படுத்தினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய ஜடேஜா ரச்சினுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடிய ரவீந்திரா 45 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 65 ரன்கள் குவித்து நிலையான ஆட்டத்தை விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் சிஎஸ்கே முதல் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.