இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். குறுகிய வடிவிலான போட்டிகளில் அபிஷேக் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், அவரிடம் நீண்ட வடிவிலான போட்டிகளிலும் சாதிக்கும் திறன் இருப்பதாக ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அபிஷேக் ஷர்மா கடந்த 18 மாதங்களாக சிவப்பு பந்து போட்டிகளில் விளையாடவில்லை. இதுவரை 24 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1,071 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடங்கும். தற்போது இந்திய அணியில் ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி வீரர்கள் உருவாகி வரும் நிலையில், திறமையான இளம் வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயார்படுத்த வேண்டும் என்பதே ரெய்னாவின் கருத்தாக உள்ளது.
“அபிஷேக் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரை நீண்ட வடிவிலான போட்டிகளுக்கு தயார்படுத்துவதில் பயிற்சியாளர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு கடின உழைப்பும் தியாகமும் தேவை” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.