கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கோச் பிரண்டன் மேக்கல்லம் விலகல்; புதிய பயிற்சியாளர் நியமனம்! இவர்தான் புதிய பயிற்சியாளர்!!

0
826

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்தவர் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம். இவர் தலைமையில் 2021ம் ஆண்டு கொல்கத்தா அணி இறுதிப்போட்டி வரை சென்றது. இந்த ஆண்டு துவக்கத்தில் பிரண்டன் மெக்கலம் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஐபிஎல் தொடர் நடந்து முடிந்த பிறகு அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகி இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கு, அந்த அணியின் நிர்வாகம் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தது. அப்போது உள்ளூர் போட்டிகளில் குறிப்பாக ரஞ்சி தொடரில் அபரமாக செயல்பட்ட சந்திரகாந்த் பண்டிட் என்பவர் பெயர் அடிபட்டது. மத்திய பிரதேஷ் அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், அந்த அணியை ரஞ்சிக்கோப்பை வெற்றிபெற வழிநடத்தியுள்ளார்.

ஆறு முறை ரஞ்சிக் கோப்பையை வென்ற பயிற்சியாளரான இவரை தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது. அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்பட்டன. இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர், மத்திய பிரதேஷ் அணியை கடந்த 23 ஆண்டுகளில் முதல் முறையாக ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி வரை எடுத்துச் சென்று, பலம்மிக்க உள்ளூர் அணியான மும்பை அணியை வீழ்த்தி இந்த கோப்பையை பெற்று தந்திருக்கிறார்.

புதிய தலைமை பயிற்சியாளராக இவரை நியமித்த பிறகு கொல்கத்தா அணியின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கி மைசூர் கூறுகையில், “சந்து எனக்கு நன்றாக தெரிந்தவர். அவரை புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரின் அடுத்த கட்ட பயணத்தை எங்களுடன் தொடர்வதில் மகிழ்ச்சி. எடுத்துக்கொண்ட வேலையை மிகவும் ஈடுபாட்டுடன் செயல்படக் கூடியவர். மேலும் உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகளை படைத்த பிறகு எங்களுடன் இணைகிறார். புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயருடன் இவர் எந்த அளவிற்கு இணைந்து பயணம் செய்யப் போகிறார் என்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்.” என்றார்.

பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு பேட்டி அளித்த சந்திரகாந்த் கூறுகையில், “உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடரில் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது மிகுந்த பொறுப்புணர்வோடு பார்க்கிறேன். கொல்கத்தா அணியின் கலாச்சாரம் மற்றும் வீரர்களின் மனநிலை ஆகியவற்றை விரைவில் புரிந்து கொண்டு வெற்றியை நோக்கி வழி நடத்த ஆவலோடு காத்திருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த கொல்கத்தா அணி நிர்வாகத்திற்கு மிகுந்த கடமைப்பட்டுள்ளேன். மேலும் கொல்கத்தா அணியில் உள்ள தரமான ஆட்களை நான் இன்னும் சந்தித்து பேச வேண்டியது நிறைய இருக்கிறது. இங்கு இணைந்ததில் மிகவும் பாசிட்டிவ் ஆக உணர்கிறேன். என்றார்.