தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய பேட்டிங் யூனிட் செயல்பட்ட விதம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48 ரன்னுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா 28 பந்தில் அதிரடியாக 58 ரன்கள் எடுத்தார். மேலும் அக்சர் படேல் மற்றும் திலக் வர்மா ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்திய அணி இறுதியாக ஆறு விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது.
இதற்குப் பிறகு பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணிக்கு பந்து வீசிய ஆறு பந்துவீச்சாளர்களும் விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் அபார வெற்றி.
இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “நாங்கள் முதலில் பேட்டிங் செய்தது நல்ல விஷயமாக அமைந்தது. முதல் 48 ரன்னில் மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு அங்கிருந்து 175 ரன்கள் எட்டியது நம்ப முடியாத ஒன்றாக இருந்தத. ஹர்திக் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார். அவருக்கு அக்சர் மற்றும் திலக் இருவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இறுதியில் ஜித்தேஷ் சிறப்பான முறையில் முடித்தார்”
“தற்போது டி20 கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது உங்களிடம் எட்டு பேட்ஸ்மேன்கள் இருந்தால், அதில் நான்கு பேர் சரியாக விளையாடினால் போதுமானதாக இருக்கிறது. மீதி நால்வர் விளையாடாததை மற்ற நால்வர் விளையாடி மறைத்து விடுவார்கள். ஒவ்வொரு போட்டியிலும் யாராவது சில வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். இப்படித்தான் இந்த போட்டியிலும் நடந்தது”
இதையும் படிங்க: என் விருப்பம் முக்கியமல்ல.. கம்பீர் சூர்யா விருப்பம்தான் முக்கியம்.. எனக்கு மனசு இருக்கு – ஹர்திக் பாண்டியா பேச்சு
“பும்ரா மற்றும் அர்ஸ்தீப் இருவரும் சிறப்பான தொடக்கப் பந்துவீச்சாளர்கள். இவர்கள் புதிய பந்தில் அற்புதமான முறையில் ஆரம்பித்தார்கள். பிறகு ஸ்பின்னர்களும் சிறப்பான முறையில் தொடர்ந்தார்கள். எங்களிடம் இருந்த பந்துவீச்சு ஆப்ஷன்களுக்கு நாங்கள் எடுத்த 175 ரன்கள் மிகவும் சிறப்பானது. நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங் செய்த விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியிருக்கிறார்.