இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபாரமான ஆட்டத்தால் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அணி வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய அணி அபார வெற்றி
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் இரண்டு டி20 போட்டியிலும் இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெற்ற தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தனது அணி வீரர்களிடம் தன்னலம் இல்லாத விளையாடும் குணத்தை எதிர்பார்ப்பாக கூறியிருக்கிறார்.
அணியில் நான் எதிர்பார்க்கும் விஷயம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு குழுவாக நாங்கள் நிறைய சாதித்து இருக்கிறோம். எனது அணியில் தன்னலமற்ற கிரிக்கெட் வீரர்கள் இருக்க விரும்புகிறேன். நாங்கள் எப்போதும் ஒரு தன்னலமற்ற அணியாக இருக்கவே விரும்புகிறோம். ஹர்திக் பாண்டியா கூறியதைப் போல களத்திலும் களத்திற்கு வெளியேயும் நாங்கள் நட்புணர்வை மேம்படுத்துகிறோம். முடிந்தவரை ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட விரும்புகிறோம். அந்தத் தோழமை குணம் களத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதையும் படிங்க:வெறும் 2 ஓவர் கூட அதை செய்யல.. நம்பிக்கையும் இல்லை.. பொறுப்பையும் எடுக்கல – பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ வேதனை
அணியை சுற்றி ஒரு நேர்மறையான குணம் நிலவுகிறது. கௌதம் கம்பீர் பாயும் இதையேதான் எங்களிடம் கூறினார். நாங்கள் இலங்கைக்கு சென்று விளையாடிய போது கூட அணியை விட பெரியவர்கள் யாரும் இல்லை என்பதை உணர்ந்தோம். நீங்கள் 49 அல்லது 99 ரன்கள் குவித்து களத்தில் இருந்தால் அணிக்காக அடுத்த பந்தை பெரிய ஷாட் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் அதை முயற்சிக்க வேண்டும். சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியில் அதனை செய்யும் போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல பழக்கவழக்கங்கள் அணியில் தொடர வேண்டும்” என்று விரும்புகிறேன் என சூரியகுமார் கூறியிருக்கிறார்.