வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா பங்கேற்பாரா ? மாட்டாரா ? கேப்டன் ஷிகர் தவான் வெளியிட்ட தகவல்

0
164
Shikhar Dhawan and Ravindra Jadeja

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரவிந்திர ஜடேஜா விளையாடுவரா? என்று தற்காலிக கேப்டன் ஷிகர் தவான் பேட்டி அளித்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி முதற்கட்டமாக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அணியின் தற்காலிக கேப்டனாக சிக்கிர்தவான் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்திய அணிக்கு அவர் கேப்டன் பொறுப்பேற்பது இதுவே முதல் முறை ஆகும். மேலும் இந்த தொடரில் பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இத்தொடரில் ஷிகர் தவான், ஜடேஜா, கே எல் ராகுல் போன்ற வெகுசில அனுபவம் மிக்க வீரர்களே இருக்கின்றனர். பலர் முற்றிலும் இளம் வீரர்கள் ஆவர். இந்நிலையில் பயிற்சியின் போது ரவீந்திர ஜடேஜாவிற்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இருந்து அவர் விலகலாம் என்று தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்தியாவிற்கு இது பின்னடைவாக அமையலாம் என்றும் கூறப்பட்டது.

இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஷிகர் தவான் சமீபத்திய பேட்டியில் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “ஜடேஜாவிற்கு காலில் சிறு அசவுகரியம் இருப்பது உண்மை. ஆனால் அவர் தொடரில் இருந்து முற்றிலும் விலகிவிடுவாரா? என்பதற்கு தற்போது பதில் கூற இயலாது. அணியின் மருத்துவ நிபுணர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அவர் கொடுக்கும் அறிக்கையே இறுதியானது. அதன் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இத்தொடரில் ஜடேஜா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பு வகிப்பது குறித்து பேசிய தவான், “என் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான தருணமாக இதை கருதுகிறேன். அணியில் அனைவரும் நன்றாக விளையாடக் கூடியவர்கள், அவர்களுக்கு நான் புதிதாக ஒன்றும் கூறிவிட முடியாது. ஆனால் சரியான தருணத்தில் எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வேன். மேலும் வீரர்களின் மனநிலையை நல்லபடியாக வைத்துக் கொள்வதற்கு முழு கவனம் செலுத்துவேன். இது மட்டுமே எனது திட்டமாக இருக்கிறது ஒரு அணியாக செயல்பட்டு இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தர வேண்டும் இதுதான் குறிக்கோள்.” என்றார்.

- Advertisement -

“பந்துவீச்சை பொறுத்தவரை சிராஜ் மற்றும் பிரஷித் கிருஷ்ணா இருவரும் இருக்கின்றனர். இருவரும் பார்த்துக் கொள்வர். சுழல் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் மற்றும் யுசி., சாகல் இருவரும் இருக்கின்றனர். ஆகையால் பந்துவீச்சில் வலிமையாக இருப்பதால், எவ்வித பின்னடைவும் இல்லை. பேட்டிங்கில் ஷ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் போன்ற பார்மில் இருக்கும் வீரர்கள் உள்ளனர். ஆகையால் ஒட்டுமொத்தமாக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சரிசமமான அணியாக இந்தியா இருக்கிறது. இந்த தொடர் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் சிறப்பாக செயல்பட்டு உலகக் கோப்பைக்கான வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள்.” எனவும் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.