இந்திய அணியால் உலக கோப்பையை வெல்ல முடியுமா? பலம் என்ன? பலவீனம் என்ன? என்ன செய்ய வேண்டும்? முழு அலசல்!

0
758
ICT

கடந்த மணி நேரத்தில் இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது!

இந்திய அணி கடந்த ஆசிய கோப்பை தொடரில் இருந்த பொழுது உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில், தற்பொழுது அக்சர் படேல் காயத்தால் இடம் பெறாத காரணத்தினால், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றிருக்கிறார். மீதி 14 வீரர்களும் முன்பு அறிவிக்கப்பட்ட அவர்களே!

- Advertisement -

இந்திய அணிக்கு சாதகம் என்று எடுத்துக் கொண்டால் முதலில் இருப்பது உலகக் கோப்பைத் தொடர் உள்நாட்டில் நடப்பதுதான். தட்பவெப்பம் மற்றும் மைதானங்களில் ஆடுகளங்கள் இந்திய வீரர்களுக்கு பழக்கமான ஒன்று. மேலும் சொந்த நாட்டில் நடப்பதால் ரசிகர்களின் ஆதரவு மிக அதிகப்படியாக இருக்கும்.

இதற்கடுத்து தற்போது அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் 15 பேரும் அவரவர் துறைகளில் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். பெரிதாக யாரையும் குறை சொல்லும் அளவுக்கு கிடையாது.

இந்திய அணியின் பேட்டிங் பலத்தை எடுத்துக் கொண்டால் முதல் ஆறு பேட்ஸ்மேன்களும் மிக நல்ல நிலையில் இருக்கிறார்கள். இந்த வருடம் இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. மேலும் ரோகித் சர்மா அணிக்கு மிகச்சிறந்த அதிரடியான துவக்கத்தை கொடுத்து நம்பிக்கையை தருகிறார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி தன்னுடைய பழைய பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். கே.எல்.ராகுலின் அனுபவம் மற்றும் தரம் மீண்டும் வெளிப்பட்டு இருக்கிறது. இசான் கிசான் இடது கை வீரராக வாய்ப்பு பெறுபவராக இருக்கிறார். இந்திய சூழ்நிலையில் இவர் நடுவரிசையில் தேவைக்கு தகுந்தபடி ஆட முடியும் திறமையை பெற்றிருக்கிறார். ஆறாவது இடத்தில் யாருக்கும் கிடைக்காத அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இந்த வகையில் பேட்டிங் யூனிட் மிக பலமாக இருக்கிறது. ஆனால் நீளம் குறைவாக இருக்கிறது!

இந்திய அணியின் பவுலிங் யூனிட்டை எடுத்துக் கொண்டால் தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்கும் பத்து அணிகளில் முதலிடம் இந்திய பவுலிங் யூனிட்டுக்கு தரலாம். வேகப்பந்து வீச்சில் பும்ரா, சிராஜ், சமி, ஹர்திக் என உலக தரத்தில் இருக்கிறார்கள்.

மேலும் சுழற் பந்துவீச்சை எடுத்துக் கொண்டால் குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா என அனுபவமும் திறமையும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். பவுலிங் யூனிட்டில் இருக்கின்ற எல்லா பந்துவீச்சாளர்களுமே விக்கெட் டேக்கிங் எபிலிட்டி கொண்டவர்கள். இவர்களால் எந்த நேரத்திலும் ஆட்டத்தில் விக்கெட்டை எடுக்க முடியும். இது மற்ற அணிகளின் பவுலிங் யூனிட்டில் பார்க்க முடியாத ஒன்று. குறைந்தபட்சம் ஒரு பந்துவீச்சாளராவது பலவீனமாக இருப்பார்!

அதே சமயத்தில் பலவீனம் என்று எடுத்துக் கொண்டால் ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை. இதனால் பொறுப்பு முதல் 6 பேட்ஸ்மேன்கள் மேல் விழுகிறது. அடுத்து இந்திய அணியின் ஃபீல்டிங் மிக கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. எளிமையான கேட்சை கூட கோட்டை விடுகிறார்கள். இது ஆபத்தான ஒன்று. இந்த இரண்டும் சிறிய கவலையை கொடுக்க கூடியது.

மற்றபடி இந்திய அணியை எடுத்துக் கொண்டால் வீரர்கள் உடல் தகுதியிலும், மனரீதியான நம்பிக்கையிலும், செயல்பாட்டு அளவிலும் பெரிய வெற்றிகளை பெற்று உச்சத்தில் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான தகுதிகள் கொண்ட அணிதான். வென்றால் ஆச்சரியப்பட எதுவுமே கிடையாது!

தற்பொழுது இந்திய அணியின் பலமாக பந்துவீச்சு மாறி இருக்கிறது. அதிரடியாக விளையாடக்கூடிய பேட்டிங் நீளம் சிறியதாக இருக்கிறது. எனவே பந்துவீச்சை மிக பலமாக அமைத்துக் கொண்டு, தங்கள் பேட்டிங் வரிசையால் எதிர்கொள்ள முடிந்த இலக்குக்கு எதிரணியை நெருக்குவதுதான், உலக கோப்பையை வெல்வதற்கான சிறந்த வழி. எனவே பீல்டிங் உலக தரத்தில் அமைய வேண்டியது மிக மிக அவசியம்.

மேலும் இந்திய ஆடுகளங்களில் இரண்டு பேட்மேன்களுக்கு அன்றைய நாள் அமைந்தாலே, முழு ஆட்டத்தையும் கையில் எடுக்க முடியும். இதன் காரணமாக இந்திய அணிக்கு இருக்கின்ற பேட்டிங் வரிசையின் நீளம் மிக கவலைப்பட வேண்டிய ஒன்று கிடையாது.

பொதுவாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அன்றைய நாளில் அந்தந்த நேரத்தில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ, சரியான முடிவுகள் எடுக்கிறார்களோ அவர்களே வெல்வார்கள் என்று சொல்வார்கள். ஏனென்றால் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான நேரம் மிகக் குறைவு. இதன் அடிப்படையில் பார்த்தால் இந்தியா சிறந்த அணியை கொண்டிருக்கிறது, சரியான திட்டங்கள் உடனும் நம்பிக்கையுடனும் களத்தில் விளையாடினால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உண்டு!