“இந்தியாவால இங்கிலாந்து மாதிரி வேகமா ரன் அடிக்க முடியுமா?” – நெத்தியடியாய் பதில் சொன்ன இஷான் கிஷான்!

0
553
Ishaan

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜோ ரூட் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக கொண்டுவரப்பட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக டெஸ்ட் அணிக்கு பிரண்டன் மெக்கலம் கொண்டுவரப்பட்ட பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள் கிரிக்கெட் போல இங்கிலாந்து விளையாடி வருகிறது!

இங்கிலாந்தின் இந்த அதிரடி டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறைக்கு, இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் மெக்கலமை பட்டப் பெயரில் அழைக்கும் பாஸ் என்பதோடு சேர்த்து பாஸ்பால் என்று அழைக்கப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது இங்கிலாந்தின் அணுகுமுறை உலக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தி வருவதை மறுக்க முடியாது. பாகிஸ்தான் அணி கூட தற்பொழுது இலங்கைக்கு எதிராக வழக்கத்தை விட வேகமாக ரன் குவித்து வருகிறது.

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் முதல் இன்னிங்சை மிகவும் பொறுப்பான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உரிய நிதானத்தில் விளையாடி, மழையின் குறுக்கீடு அதிகமாக இருந்த காரணத்தினால், இரண்டாவது இன்னிங்ஸை டி20 போல் விளையாடி டிக்ளர் செய்திருந்தது. இதில் 12.2 ஓவர்களில் 100 ரண்களைக் கடந்து உலக சாதனையும் படைத்திருந்தது.

இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் ரோகித் சர்மா 35 பந்தில் அரை சதத்தையும், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இசான் கிஷான் 33 பந்தில் அரை சதத்தையும் அதிரடியாக விளாசி இருந்தார்கள். ரிஷப் பண்ட்க்கு அடுத்து அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை, மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி படைத்தார் இஷான் கிஷான்.

- Advertisement -

அவரிடம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணியால் இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகு முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட முடியுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு இஷான் கிஷான் மிகவும் தெளிவான முறையில் அசத்தலாக பதில் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்பொழுது ” தினமும் நீங்கள் உள்ளே வந்து மிக வேகமாக விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. அது சூழ்நிலையை பொறுத்தது. ஒருவர் எவ்வளவு விரைவாக ரன்கள் எடுக்க முடியும் என்பதில் ஆடுகளத்தின் தன்மையும் அடங்கி இருக்கிறது.

பெரும்பாலும் நாங்கள் விளையாடும் இடங்களில் விக்கட்டுகள் விளையாடுவதற்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. ஆடுகளத்தில் திருப்பமும், பவுன்சும் இருக்கும். எனவே அப்படியான ஆடுகளத்தில் விரைவாக ரன் எடுக்கும் முயற்சியில் எந்த அர்த்தமும் கிடையாது. ஏனென்றால் நீங்கள் ஆடுகளத்தை சரியாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.

ரன் அடிப்பதற்கு சுலபமான ஆடுகளம் கிடைத்தால், விரைவாக ரன் அடிக்க வேண்டிய தேவை இருந்தால், இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களுக்கும் அதைச் செய்து முடிக்கின்ற திறமை இருக்கிறது.

எங்களிடம் உள்ள வீரர்கள், நாங்கள் விளையாடும் கிரிக்கெட் வடிவங்கள் மற்றும் நாங்கள் விளையாடும் போட்டிகளின் எண்ணிக்கை என ஒவ்வொருவருக்கும் அணியில் அவரவருடைய பங்கு என்ன என்பது தெளிவாக தெரியும். எனவே ஒவ்வொரு போட்டியிலும் இப்படி விரைவாக ஆட வேண்டிய தேவை கிடையாது. அது சூழ்நிலையின் அடிப்படையிலான தேவையாக இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!