இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்த நிலையில் அதற்கு அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் விராட் கோலி மீண்டும் இந்திய அணிக்காக களம் இறங்க உள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 19 ஆண்டு கால சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார்.
இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரரான சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை 463 போட்டிகளில் விளையாடி 18,426 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 96 அரை சதங்கள் மற்றும் 46 சதங்கள் அடங்கும். சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனை என்பது உலகத்தின் எந்த ஒரு வீரராலும் அவ்வளவு எளிதாக முறியடிக்க முடியாத சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் மிகச் சிறந்த ஜாம்பவானாக திகழ்ந்திருக்கிறார்.
இவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் நட்சத்திர தற்போதைய மாடர்ன் டே பேட்ஸ்மேன் விராட் கோலி இருக்கிறார். ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் சிறந்த வீரராக இருக்கும் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் சமீப காலத்தில் மோசமான பேட்டிங் சரிவை சந்தித்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரது பேட்டிங் வீழ்ச்சி இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
சாதனையை முறியடிக்க வாய்ப்பு
இருப்பினும் விராட் கோலி விரைவில் மீண்டும் தனது பழைய பேட்டிங் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் களமிறங்க உள்ள விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 19 ஆண்டு கால சாதனையை முறியடிக்க தயாராக இருக்கிறார். இதுவரை 253 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 13906 ரன்கள் குவித்திருக்கிறார். 14 ஆயிரம் ரன்கள் குவிப்பதற்கு இன்னும் விராட் கோலிக்கு 94 ரன்கள் தேவைப்படுகிறது.
இதையும் படிங்க:1-2 தடவனா பரவால்ல.. ஒவ்வொரு தடவையும் மோசமா இருந்தா எப்படி.. முன்னணி வீரர்கள் மீது அஸ்வின் விமர்சனம்
அதை அடுத்த மூன்று ஒரு நாள் போட்டிகளுக்குள் விராட் கோலி எடுக்கும் நிலையில் குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 14000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க தயாராக இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை தனது 350 ஆவது ஒரு நாள் போட்டியில் பிப்ரவரி 2006ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 100 ரன்கள் எடுத்த போது இந்த சாதனையை நிகழ்த்தினார். இப்போது அந்த சாதனையை விராட் கோலி முறியடிப்பதற்கு ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இதனை பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.