மும்பை இந்தியன்ஸ்க்கு ஹர்திக் பாண்டியா வருகையால் பும்ரா அதிருப்தி?.. அவரின் இன்ஸ்டாகிராம் பதிவால் எழுந்த சர்ச்சை!

0
2662
Bumrah

இந்திய கிரிக்கெட் அணி கடந்த வாரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்தது. இது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் அணி வீரர்களையும் மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.

சில வீரர்கள் அதிலிருந்து வெளியே வந்து தங்களுடைய மனக்காயம் எந்த அளவில் இருக்கிறது என்று காட்டி இருக்கிறார்கள். வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கின்ற அளவில் தங்களது சோகத்தை பகிர்ந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

சூரியகுமார் மட்டும் உடனடியாக எல்லாவற்றையும் தள்ளி வைத்து அடுத்த மூன்று நாட்களில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று அதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

இன்னொரு பக்கம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இருந்த சில வீரர்கள் குறிப்பாக விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றோர் தோல்வி குறித்து எந்தவித கருத்தையும் இதுவரையில் முன் வைக்காமல் இருந்து வந்தார்கள்.

இந்த நிலையில் திடீரென ஜஸ்பிரித் பும்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மௌனம் சில சமயங்களில் சிறந்த பதிலாக இருக்கும்” என்று ஒரு பதிவை பதிவு செய்திருக்கிறார். இது தற்பொழுது பல யூகங்களை கிளப்பியிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி இறுதிப் போட்டிகள் தோல்வி அடைந்து இதனால் வரையில் அமைதியாக இருந்த பும்ரா, தற்பொழுது இப்படி ஒரு கருத்தை முன் வைத்திருக்கின்ற காரணத்தினால், இது இந்திய அணியின் தோல்விக்கானது அல்ல என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதாவது மீண்டும் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கொண்டு வந்ததுதான் பும்ராவின் அதிருப்திக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை பும்ரா வழிநடத்தினார். அப்பொழுது அடுத்த கேப்டன் பதவிக்கு தகுதியானவராக ஹர்திக் பாண்டியாவை விட இவரே இருக்கிறார் என்ற கருத்துக்கள் நிறைய வந்தன. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது சரியாக இல்லை.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவுக்கு பிறகு பும்ராவே கேப்டனாக வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கணிக்கப்பட்டது. தற்பொழுது அடுத்த கேப்டனுக்காகவே ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வாங்கியிருப்பதாக எழுந்த பேச்சுகள் பும்ராவை காயப்படுத்தி இருப்பதாக தெரிகிறது என்று கூறப்படுகிறது.