“இந்தியாவுக்கு நற்செய்தி” இரண்டு முக்கிய வீரர்கள் மீண்டும் வராங்க!

0
178

பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் மீண்டும் உடல் தகுதியை நிரூபித்து இந்திய அணிக்கு திரும்புகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மோசமான பந்துவீச்சு மட்டுமே. முன்னணி பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் போன்றோர் இத்தொடரில் இடம்பெறவில்லை. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களும் அனுபவம் இன்மை காரணமாக முக்கியமான கட்டத்தில் செய்த சில தவறுகளால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் காயம் காரணமாக ஆசியகோப்பை தொடரில் பங்கேற்காமல் சிகிச்சை மேற்கொண்டு பெங்களூரில் உள்ள இந்திய தேசிய அகடமியில் உடல்தகுதி மற்றும் பயிற்சி இரண்டையும் மேற்கொண்டு வந்தனர். உலகக்கோப்பை தொடர் துவங்க இன்னும் சில வார காலங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் திரும்புவார்களா? என்ற கேள்விகளும் எழுந்து வந்தது.

இந்நிலையில் இந்திய தேசிய அகடமி அதிகாரி ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இருவரும் மீண்டும் உடல்தகுதியை நிரூபித்துவிட்டார்கள். விரைவில் டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணி வெளியிடப்படும் அதில் இவர்கள் இருவருக்கும் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ஆசிய கோப்பை தொடரில் முன்னணி பந்துவீச்சாளர்கள் இருவரும் இல்லாத போது நல்ல நிலைமையில் இருக்கும் முகமது சமி ஏன் எடுக்கப்படவில்லை? என்ற கேள்விகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் முகமது சமி, டி20 போட்டிகளில் இடம் அளிக்கப்படாமலே இருந்து வந்தது. ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் முன்னணி பந்துவீச்சாளராகவும் இவர் இருந்தார்.

- Advertisement -

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாத ஆவேஷ் கான் மற்றும் காயம் காரணமாக வெளியில் சென்ற ஜடேஜா இருவரில் யாராவது ஒருவருக்கு பதிலாக முகமது சமி உள்ளே எடுத்து வரப்படலாம் என்ற மற்றொரு கருத்தும் நிலவி வருகிறது.

ஆசியகோப்பை தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் எதிராக டி20 தொடரில் பங்கேற்க இருக்கிறது. அதன்பிறகு அக்டோபர் இறுதியில் டி20 உலக கோப்பை தொடரில் நேரடியாக பங்கேற்க உள்ளது. டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்கான இந்திய அணி குறித்து தீவிர ஆலோசனையில் இந்திய அணியின் தேர்வு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டு விடும் என்றும் தகவல்கள் வெளி வருகின்றன.

பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஆசிய கோப்பை தொடரில சதம் விளாசிய விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பியிருப்பதும் சிறப்பு. இந்திய அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பலத்தை கொடுத்து வருவதால் டி20 உலக கோப்பையை வெல்லும் என்று கருதப்படும் அணிகளில் முதன்மையானதாக இந்தியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.