டி20 உலகக்கோப்பையில் பும்ரா இல்லை என்றால் இவர்தான் சரியானவர்; இதுதான் காரணம் – ஷேன் வாட்சன் வித்தியாச வழிகாட்டல்!

0
708
Bumrah

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து, கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரது திட்டம் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் இதில் தற்போது பெரிய பின்னடைவாக இடக்கை சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜடேஜாவின் காயமும், இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் காயமும் அமைந்திருக்கிறது!

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் ரவீந்திர ஜடேஜா விலகியது இந்திய அணிக்கு பின்னடைவுதான் என்றாலும், தற்போது ஜஸ்பிரித் பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் தேசிய கிரிக்கெட் அகடமியின் கண்காணிப்பின் கீழ் இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். ஏனென்றால் ரவீந்திர ஜடேஜாவுக்கு மாற்று வீரராக அக்ஷர் படேல் கிடைத்தார். ஆனால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அப்படி யாரும் இந்திய அணியில் கிடையாது.

- Advertisement -

ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள முதுகுப்பகுதி காயம் என்பது அறுவை சிகிச்சையால் சரி செய்யப்பட கூடியது அல்ல. அவர் பந்துவீசும் முறையால் முதுகுப் பகுதியில் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு உண்டாகும் காயம். இதற்கு மருத்துவம் என்பது சரியான ஓய்வுதான். இதனால் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இந்திய அணி இங்கிருந்து உலகக் கோப்பையில் தன் முதல் போட்டியை விளையாட ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு மேல் இருக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குள் பும்ரா சரியாகி விடுவாரா என்ற கேள்விக்குறி முன் இருக்கிறது. இதற்காக பிசியோ மற்றும் மருத்துவர்களின் அறிக்கைகளை எதிர்பார்த்து இந்திய அணி நிர்வாகம் காத்திருக்கிறது.

நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு ஜஸ்பிரித் பும்ரா கிடைக்க மாட்டார் என்றால் எந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் சரியாக இருப்பார்? எந்தக் காரணத்தால் அவர் சரியாக இருப்பார்? என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும் பொழுது
” பும்ரா கிடைக்கவில்லை என்றால் நான் விளையாடும் வீரர் முகமது சிராஜ்தான். ஆஸ்திரேலியாவில் மைதானங்கள் அளவு பெரியது. ஆஸ்திரேலிய விக்கட்டுகளில் வேகமும் பவுன்சும் இன்றியமையாதது. புதிய பந்தில் முகமது சிராஜ் சிறந்த பந்துவீச்சாளர். அவர் வேகமாகவும் வீசுவார். அவர் பந்தை ஸ்விங்கும் செய்வார். அதேபோல் பந்துவீச்சில் அவரது தற்காப்பு யுக்தியும் நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் பும்ரா பற்றி பேசிய அவர்
” நேர்மையாகச் சொல்வதென்றால் பும்ரா இல்லை என்றால் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் வாய்ப்பை குறைக்கும். பும்ரா உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர். அவரால் ஆட்டத்தின் எந்த பகுதியிலும் சிறப்பாக பந்து வீச முடியும். அவருக்கு ஈடான ஒரு வீரர் கிடையாது. இந்திய அணியின் பந்து வீச்சு அமைப்பை எடுத்துக்கொண்டால் தரத்தில் ஜஸ்பிரித் பும்ரா தனியே நிற்கிறார் ” என்று கூறியுள்ளார்!