“தம்பி! ஆண்டர்சன் வால்ஸ பாத்து கத்துக்க!” – பும்ராவுக்கு மெக்ராத் அனுப்பிய ஸ்பெஷல் அட்வைஸ்!

0
574
Bumrah

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் அணியின் தலைமை பொறுப்புகளில் இருந்தபொழுது உச்சத்திற்கு உயர்ந்தது!

இதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறைதான். விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் இந்திய வேகபந்துவீச்சாளர்களை ஆதரித்தார்கள். பும்ரா, சமி இருவரும் உலகில் எந்த இடத்திலும் விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்களாக பேட்ஸ்மேன்களை பயமுறுத்தினார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் பும்ரா கடந்த ஆண்டின் இறுதி மாதங்களில் காயமடைந்து, தற்போது வரை இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். மேலும் ஆகஸ்ட் 18ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக அயர்லாந்தில் ஆரம்பிக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணிக்கு திரும்புவதோடு கேப்டன் ஆகவும் பொறுப்பேற்கிறார்.

இந்த நிலையில் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ராத் பும்ராவுக்கு ஒரு சிறப்பு ஆலோசனையை வழங்கியிருக்கிறார். அதில் சில லெஜெண்ட் வேகப்பந்துவீச்சாளர்களை காட்டி உதாரணம் கூறியிருக்கிறார்.

மெக்ராத் கூறும்பொழுது “பும்ரா விதிவிலக்கானவர். அவர் தனித்துவமானவர். அவர் பந்துவீசும் விதம், அவர் ரன் அப் மற்றும் அவரது பந்துவீச்சு மிகவும் தனித்துவமானவை. ஆனால் அவர் பந்து வீசும் முறையால் அவர் உடலுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதை கையாள அவர் வலுவாக இருக்க வேண்டும். அப்படி அவர் தன் உடலை பராமரித்தால் அவர் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும்.

- Advertisement -

தற்போதைய சர்வதேச கிரிக்கெட் அட்டவணை மற்றும் ஐபிஎல் தொடர் அட்டவணை, மேலும் பிற டி20 லீக்குகளின் அட்டவணை போன்றவைகள் பும்ரா மாதிரியான வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடுவதை கடினமாக்குகிறது. ஆனாலும் சில பந்துவீச்சாளர்களால் இதைச் செய்ய முடியும்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கோர்ட்னி வால்ஷ் போன்ற தோழர்கள் தங்களது உடலை எவ்வாறு பராமரிப்பது என்று பல ஆண்டுகளாக நமக்கு முன்மாதிரியாக இருந்து காட்டி விளையாடுகிறார்கள். நான் என்னுடைய உடற்தகுதியில் மிகக் கடுமையாக உழைத்தேன். இதன் காரணமாகத்தான் நான் காயத்திலிருந்து மிக எளிதாகவும் வேகமாகவும் தப்பித்து வந்தேன்!” என்று கூறி இருக்கிறார்!

இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில், இந்தியாவுக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்று பேசும் பல முன்னாள் வீரர்களும் சொல்லக்கூடிய கருத்தில், ஒரு விஷயம் தவறாமல் இடம் பெறுகிறது, அது என்னவென்றால், பும்ரா நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதுதான். அந்த அளவிற்கு ஆட்டத்தில் தாக்கத்தை செலுத்தக்கூடிய வீரராக அவர் இருக்கிறார். அயர்லாந்து மற்றும் ஆசிய கோப்பை தொடரில் அவரது உடல் தகுதி பற்றி நமக்கு விரிவாகத் தெரிந்துவிடும்!