நாங்க ரெண்டு பேரும் 4-5 ஓவர் நின்னாலே ஆட்டம் முடிஞ்சுடும்னு நல்லா தெரியும் – சுப்மன் கில் மாஸ் பேட்டி!

0
1963
Gill

நேற்று ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரின் நான்காவது போட்டி அமெரிக்காவின் ப்ளோரிடா மைதானத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் 179 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் சேர்ந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்து அசத்தினார்கள். இந்த இரண்டு இளம் வீரர்களுமே ஆட்டத்தை அவர்களே முடித்து விட்டார்கள்.

- Advertisement -

இறுதி நேரத்தில் ஆட்டம் இழந்த சுப்மன் கில் 47 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற ஜெய்ஸ்வால் அணியின் வெற்றியை உறுதி செய்து 51 பந்தில் 84 ரன்கள் சேர்த்தார்.

இந்த ஜோடி நேற்று இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த துவக்க ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்னால் இந்தச் சாதனை தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் துவக்க ஜோடியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திர வீரரான கில் அவருடைய தரத்திற்கான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. முதல் மூன்று போட்டிகளிலும் அவர் 10 ரன்களை தாண்டவே இல்லை. உலகக் கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது இந்திய அணிக்கு புதிய தலைவலியாக இருந்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அவர் மீண்டும் திரும்பி வந்தார்.

- Advertisement -

இதுகுறித்து சுப்மன் கில் பேசும்பொழுது
“ரன்கள் எடுக்க கடினமாக இருக்கும் பொழுது நீங்கள் பேட்டிங்கின் அடிப்படை விதிகளில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் தவறு செய்திருக்கிறீர்களா என்று கண்டறிய வேண்டும். முதல் மூன்று ஆட்டங்களில் நான் பெரிதாக எந்தத் தவறையும் செய்யவில்லை. சில நேரங்களில் நல்ல ஷாட்கள் கூட நேராக பீல்டரின் கைகளுக்கு செல்லும்.

நீங்கள் இதையெல்லாம் அதிகம் யோசிக்க முடியாது. நீங்கள் எப்பொழுதும் ரன்களை எடுக்க முயற்சித்துக் கொண்டே இருக்கும் பொழுது, இது போன்ற விஷயங்கள் நடக்கத்தான் செய்யும். நீங்கள் சிறப்பாக விளையாடிய பொழுது உங்களுக்கு என்ன டெம்ப்ளேட் நன்றாக வேலை செய்தது என்று நீங்கள் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் முக்கியம்.

முதல் மூன்று ஆட்டங்களில் நான் 10 ரன்களை கூட தாண்டவில்லை. இந்த விக்கெட் நன்றாக இருந்தது. இதனால் எனக்கு கிடைக்கும் துவக்கத்தை பயன்படுத்தி பிற்பகுதியில் ஆட்டத்தை வேகப்படுத்தி மொத்தமாக முடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு நல்ல பவர் பிளேவை கொண்டு வந்தோம். அங்கிருந்து நாங்கள் மேற்கொண்டு நான்கு ஐந்து ஓவர்கள் விளையாடினாலே ஆட்டம் முடிந்துவிடும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அதன்படியே நாங்கள் எங்களது திட்டங்களுக்கு விளையாடினோம்!” என்று கூறியிருக்கிறார்!