ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்பே சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு”- அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் அறுவை சிகிச்சை காரணமாக விலகல்!

0
699

உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் முதன்மையான லீக் போட்டியாக பார்க்கப்படுவது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஆகும் . 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி மே மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன . இந்தப் போட்டிகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துவங்கி மே 28ஆம் தேதி அன்று அதே நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முடிவடைகிறது.

ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதை முன்னிட்டு அதற்கான வீரர்கள் தங்களது ஆயத்தப் பணிகளை தொடங்கி விட்டனர் . ஒரு மாத காலமே இடைவெளி உள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் 10 அணிகளும் தங்களது வீரர்களை போட்டிக்கு தயார்படுத்த துவங்கிவிட்டன . இதன் ஒரு பகுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்போதைய பயிற்சி முகாம்களை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் போட்டிகள் இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது . போட்டிகளில் கலந்து கொள்ளும் 10 அணிகளின் ஹோம் கிரவுண்டுகளில் ஆட்டங்கள் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் . ஐபிஎல் தொடர்களில் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது . மேலும் அந்த அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளோடு ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிஎஸ்கே அணி அவரை வெற்றியுடன் வழியனுப்ப கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை .

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் துவங்குவதற்கு முன்பாக சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது . அந்த அணியின் முக்கியமான ஆல் ரவுண்டர் ஒருவர் காயம் காரணமாக பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அந்த வீரர் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது . கடந்த டிசம்பர் மாதம் கொச்சினில் நடைபெற்ற ஐபிஎல் வீரர்களுக்கான மினி ஏலத்தில் நியூசிலாந்து அணியின் பௌலிங் ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசனை சிஎஸ்கே அணி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்த 9 மாதங்களாகவே அவர் காயம் காரணமாக எந்தவித போட்டிகளில் பங்கு பெறவில்லை என்றாலும் காயத்திலிருந்து மீண்டு வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கே அணி அவரை வாங்கியது .

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் போது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் பயிற்சிகளை துவக்கிய ஜேமிசன் . மீண்டும் முதுகு வலி பிரச்சனையின் காரணமாக அணியில் இருந்து விலகினார் . இந்நிலையில் அவர் முதுகு வலி காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் அறிவித்திருக்கிறார் .

- Advertisement -

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ” ஜெமிசன் முதுகுவலி காயத்தால் அவதிப்பட்டு வந்தபோது சில காலம் ஓய்வில் இருந்தால் காயம் சரியாகிவிடும் என கருதினோம் . ஆனால் தற்போது அந்த காயம் அவருக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளதால் இது அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம் . இது தொடர்பாக இன்னும் சில நாட்களில் ஜேமிசன் மருத்துவரை சந்தித்து அறுவை சிகிச்சைக்கு கலந்தாலோசிக்க இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குறைந்தபட்சம் 4 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். இதனால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அதனை அடுத்து நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டி தொடர்களிலும் கயல் ஜெமிசன் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்ற செய்திகள் தெரிவிக்கின்றன . மேலும் இவருக்கு பதிலாக மாற்று வீரராக இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனக்காவை சிஎஸ்கே அணி எடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது .