இந்த இந்திய வீரருக்கு நடந்தது பெரிய அநியாயம்? – பாகிஸ்தான் வீரர் ஆதரவுக்கரம்!

0
88
T20 wc 2022

நேற்று மாலை, அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி தேர்வு குழுவின் அணித் தேர்வு பற்றி பலவிதமான கருத்துக்களை வெளியில் பலர் கூறி வருகிறார்கள்.

இப்படி வெளியிலிருந்து வரும் பெரும்பாலான கருத்துகளில் இடம்பெறுவது ஒருவரது பெயர்தான் ; அவர் கேரளாவை சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப் போட்டி வரை சென்றது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

ராகுல் டிராவிட் வழிகாட்டலில் வந்த சஞ்சு சாம்சனுக்கு அவர் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருப்பதால் வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்தியாவில் நடந்த டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் அயர்லாந்து சென்ற அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அங்கும் ருதுராஜ் காயமடைந்த காரணத்தினால் மட்டுமே அவர் விளையாடினார். அந்தப் போட்டியிலும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தார். இதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான ஒருநாள் தொடரில் வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடி, டி20 தொடரில் இடம் பெற்றார் ஆனால் அங்கு அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதற்கடுத்து ஆசியக் கோப்பையிலும் வாய்ப்பு கிடைக்காத அவர், தற்போது டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து வெளியே இருக்கிறார். உலகக் கோப்பை அணியில் தேர்வாக முடியாத காரணத்தால், அடுத்து இந்தியாவில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளோடு நடக்க இருக்கும் டி20 தொடர்களுக்கும் தேர்வாகவில்லை.

மொத்தம் 16 சர்வதேச டி20 போட்டிகளில் வாய்ப்பு பெற்றுள்ள சஞ்சு சாம்சன். 15 இன்னிங்ஸ்களில் 296 ரன்களை 21 ரன் சராசரியில் 135 ஸ்டிரைக் ரேட்டில் அடித்திருக்கிறார். இந்தியா டி20 உலகக்கோப்பை அணியில் ரிசர்வ் வீரராக இடம்பெற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயரை விட இவரது பேட்டிங் டி20 கிரிக்கெட் வடிவத்தில் மிகவும் சிறப்பாக இருக்கக் கூடிய ஒன்று. ஆனால் இவருக்கு ரிசர்வ் வீரராகவும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இதெல்லாம் தொடர்ந்து நடந்து வருவதால் இவரது சொந்த மாநிலமான கேரளாவில் இதைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வர ஆரம்பித்திருக்கிறது. வேறு நாட்டில் இருந்திருந்தால் பெரிய வீரராக வந்திருப்பார் என்றும், வேறு நாடுகளுக்காக போய் விளையாடுங்கள் என்று கூறுமளவிற்கு ரசிகர்கள் விரக்தி அடைந்து இருக்கிறார்கள்.

சஞ்சு சாம்சனுக்கான ஆதரவு தற்போது கேரளாவை தாண்டி இந்தியா விரிந்து பாகிஸ்தான் வரை பரவியிருக்கிறது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா சஞ்சு சாம்சன் டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வாகதது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி டேனிஷ் கனேரியா கூறும்பொழுது ” சஞ்சு சாம்சன் போன்ற வீரருக்கு இது நடந்தது மிக அநியாயம். டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அவரது பெயர் கண்டிப்பாக பரிசீலிக்கப்பட்டு இருக்கவேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் சொந்த நாட்டில் நடக்கும் டி20 தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். அப்படி அவர் என்ன தவறு செய்தார்? தேர்வுக் குழுவில் நான் இருந்திருந்தால் ரிஷப் பண்ட்க்கு பதிலாக சஞ்சு சாம்சன் உடன் சென்று இருப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்!