தன் கணவர் மீதான சமூக வலைதள தாக்குதலுக்கு புவனேஸ்வர் குமாரின் மனைவி பதிலடி!

0
1370
Bhuvaneshwar

தற்போதைய இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார் இருந்து வருகிறார். சமீபத்தில் டெத் ஓவர்களில் இவரின் செயல்பாடு மிகவும் சுமாராக மாறி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் அவரை நம்பி பந்தை கையில் கொடுக்கும் போதெல்லாம் அவர் அந்த நம்பிக்கையை வீண் அடிக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில், ஆட்டத்திற்கு மிகவும் முக்கியமான 19-வது ஓவரை புவனேஸ்வர் குமார் மிகவும் மோசமாக வீசினார். அதே சமயத்தில் அந்த ஆட்டத்தில் இறுதிவரை இளம் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் மிகச் சிறப்பாக வீசினார்.

இதேபோல் இந்த தொடரில் அடுத்து இலங்கை அணியுடனான மிக முக்கிய ஆட்டத்தில் 19வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ரன்களை மீண்டும் விட்டுத் தந்தார். இவரின் செயல்பாடு இந்திய பேட்டிங் யூனிட் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தாலும், இந்திய அணியை ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியே கொண்டு வந்துவிட்டது என்று கூறலாம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில், மீண்டும் இறுதிக் கட்ட ஓவர்களில் சொதப்பினார். மொத்தம் 4 ஓவர்கள் பந்து வீசிய இவர் 49 ரன்களை விட்டுக்கொடுத்து இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக பந்துவீச்சில் அமைந்தார்.

ஆரம்பத்தில் வந்த புவனேஸ்வர் குமார் இடம் சுவிங், சராசரி வேகம் இறுதி ஓவர்களில் நல்ல ப்ளாக் ஹோல் மற்றும் யார்க்கர் பந்துகள் இருந்தன. பின்பு இதில் வேகம் கழிந்தது. ஆனாலும் மற்ற இரண்டை கொண்டு சமாளித்தார். தற்பொழுது ஸ்விங் மட்டுமே இருக்கிறது. இதனால் இவரால் இறுதி கட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களை சமாளிக்க முடிவதில்லை. இது அணிக்கு பெரிய பின்னடைவாக உருவாகி வருகிறது.

அவரின் தொடர் செயல்பாடு மோசமாகி வருவதால், சமூக வலைதளங்களில் அவர் குறித்த விமர்சனங்களும் மோசமாகி வருகிறது. அவர் மீதான மோசமான விமர்சனங்களை எதைக் கொண்டும் நியாயப்படுத்தவே முடியாது. விமர்சனம் என்கின்ற பெயரில் பயன் படுத்தப்படும் வார்த்தைகள் அருவருக்கத்தக்க வகையில் இருக்கின்றன. அவை முற்றிலும் வெறுப்பால் அமைந்தவை.

தற்பொழுது தன் கணவர் புவனேஷ்வர் குமாரின் மீது மிகமோசமாக சமூகவலைதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அவரது மனைவி நுபுர் நஹர் காட்டமாகப் பதிலளித்து உள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ளது “இப்பொழுதெல்லாம் மக்கள் மதிப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குச் சிறப்பாக செய்ய எதுவுமில்லை. வெறுப்பையும் பொறாமையையும் பரப்புவதற்கு இவ்வளவு நேரம் இருக்கிறது. அவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், உங்கள் வார்த்தைகளால் உங்களுடைய இருப்பை நீங்கள் காட்டிக் கொள்வதால் இங்கு யாரும் பாதிப்படைய போவதில்லை. எனவே உங்கள் நேரத்தை உங்களை மேம்படுத்திக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்திட்டு இருக்கிறார்!