“விராட் கோலியை தாண்டி பாகிஸ்தானை 6 ரன்னுக்கு இந்தியா சுருட்டிருச்சு” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பான பேச்சு!

0
839
Virat

நேற்று ஆசியக்கோப்பையின் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணியின் மீது இருந்த விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை ஒரே அடியாக துடைத்து எறிந்திருக்கிறது இந்திய அணி!

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அரைசதம் எடுத்து வெளியேற, அடுத்து வந்த விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் சதங்கள் நொறுக்கி இந்திய அணிக்கு நல்ல நம்பிக்கை கொடுத்தனர்.

- Advertisement -

இதில் விராட் கோலி இன்னிங்ஸை கட்டமைத்த விதம் அற்புதமாக இருந்தது. அவர் ரன்கள் கொண்டு வந்தது தெரியவே இல்லை. ஒரு கட்டத்தில் கே எல் ராகுல் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்க அமைதி காத்த விராட் கோலி, பின்பு தன்னுடைய வழக்கமான கிரிக்கெட் ஷாட்களால், சீராக பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களிடமிருந்து ரன்களை பிடுங்கிக் கொண்டிருந்தார்.

நேற்று விராட் கோலி 94 பந்துகளை சந்தித்து, அதில் ஒன்பது பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் 122 ரன்கள் குவித்தார். பின்பு இந்திய அணி பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு நிறுத்தி, 228 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. நேற்று விராட் கோலி ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.

நேற்றைய போட்டி பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “இந்தியா 228 ரன்கள் என்கின்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் பலரால் செய்ய முடியாத வெற்றியை பதிவு செய்தது. இந்தியா 356 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 128 ரன்களுக்கு தடுத்து நிறுத்தியது. இந்திய தரப்பில் விராட் கோலி 122 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணி அதைவிட ஆறு ரன்கள் மட்டுமே சேர்த்து எடுத்தது.

- Advertisement -

உண்மை என்னவென்றால் நேற்றைய போட்டியில் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டார்கள். நேற்றைய ஆட்டம் குறித்து மனதில் தோன்றக்கூடிய விஷயம் இடிப்பு, அழிவு என்பதாகத்தான் இருக்கிறது. அப்படித்தான் பாகிஸ்தான் அணியும் உணர்ந்திருக்க கூடும்.

முதல் நாளில் மழை குறுக்கீட்டில் விளையாடிய இந்தியா 24 ஓவர்களில் 147 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்திருந்தது. ஆனால் அதற்கடுத்து துவங்கிய போட்டியில் இந்திய வீரர்களின் ஒரு விக்கெட்டை கூட பாகிஸ்தான் கைப்பற்றாதது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுடைய முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் அடைந்தது அவர்களுக்கு பின்னடைவை உருவாக்கியது!” என்று கூறி இருக்கிறார்!

இந்திய அணி இன்று தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது சுற்றில் இரண்டாவது போட்டியில் மோதுகிறது. இந்த இடத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு வந்து விடும். இல்லையென்றால் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 15 ஆம் தேதி விளையாட இருக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது!