தற்போது இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான நிலையில் இருக்கிறது. இங்கிலாந்து அணியின் அதிரடி அணுகுமுறை இந்தியாவில் எடுபடுமா? என்கின்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் இரண்டாவது நாளின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்திருக்கிறது.
இதன் மூலமாக இந்திய ஆடுகளம் பற்றிய சர்ச்சைகளுக்கு இந்தப் போட்டியில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இங்கிலாந்து பேட்டிங் யூனிட் சிறப்பாக செயல்பட்டாலும் கூட, இங்கிலாந்தின் பவுலிங் யூனிட்டால் இந்திய அணியை எதுவும் செய்ய முடியாது என்பதாகத்தான் தெரிகிறது.
தற்பொழுது 175 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். இந்த போட்டியில் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவீந்திர ஜடேஜா, தற்பொழுது 81 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்திலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்திர ஜடேஜா சில ஆண்டுகளாக பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்த பிறகு உள்நாடு வெளிநாடு என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் மிகச் சிறப்பாக மாறி இருக்கிறது. இந்திய அணியின் மொத்த பேட்டிங் யூனிட்டும் கடந்த சில வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய பொழுது, ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும்தான் பலமுறை காப்பாற்றி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பற்றி பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா ” நாம் ரவீந்திர ஜடேஜாவை பாராட்ட வேண்டும். ஆனால் நாம் பல நேரங்களில் அவருடைய சிறப்பான செயல்பாட்டை புறக்கணித்து அவமானப்படுத்துகிறோம். அவருக்கு முக்கியத்துவம் நாம் கொடுப்பதில்லை. டெஸ்ட் ஆல் கவுண்டர்கள் தரவரிசையை எடுத்துக் கொண்டால் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரை விட முதல் இடத்தில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா 90 புள்ளிகள் அதிகம் பெற்று இருக்கிறார்.
இந்த போட்டியில் சதம் அவர் அடிக்கலாம், மேலும் பந்துவீச்சில் மூன்று விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார், மேலும் விக்கெட்டுகள் இந்த போட்டியில் எடுப்பார், இதனால் மேலும் அவருக்கு ஆல்ரவுண்டர் பட்டியலில் நிறைய புள்ளிகள் கிடைக்கும். இதன் மூலம் இரண்டாவது இடத்தில் இருக்கும் வீரரை விட இவருடைய புள்ளிகள் வித்தியாசம் அதிகமாகும்.
இதையும் படிங்க : “டீமா விட்டு தூக்க 2நிமிஷம் போதும்.. டிராவிட் புஜாரா மாதிரிதான் விளையாடனுமா?” – கில்லுக்கு ராகுல் ஓஜா ஆதரவு
இருந்தாலும் கூட உலக கிரிக்கெட்டில் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் கடைசியாக அவர் எப்போது பந்து வீசினார் என்றே தெரியவில்லை. ஆனால் அவரே இன்னும் சிறந்த ஆல் ரவுண்டராக கருதப்படுகிறார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்ட முடியாத இடத்தில் சிறந்த ஆல் ரவுண்டராக இருப்பது ரவீந்திர ஜடேஜாதான்” என்று சற்றுக் காட்டமாகவே கூறியிருக்கிறார்.