23 ஓவரில் இலங்கைக்கு அடி.. நியூசிலாந்து அபார வெற்றி.. பாகிஸ்தானை வெளியேற்றியதா?.. மாறிய கள நிலவரங்கள்!

0
2602
New Zealand

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இன்று பெங்களூர் மைதானத்தில் இலங்கை அணியும் நியூசிலாந்து அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற நியூசிலாந்து அணிக்கு மிக முக்கியமான போட்டி. ஏற்கனவே இதே மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து பாகிஸ்தான் அணியிடம் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த போட்டியில் நல்ல ரன் ரேட்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் நாளை பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியின் முடிவு நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்காது. இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் இந்த முறை பந்துவீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குசால் பெரேரா 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை தந்தாலும் கூட, அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்களால் அந்த துவக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. மொத்தம் ஆறு பேர் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினார்கள்.

இறுதிக்கட்டத்தில் வந்த மதிஷா தீக்ஷனா மட்டும் தாக்குப்பிடித்து 38 ரன்கள் எடுத்த காரணத்தினால் 46.4 ஓவர்களில் இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகள், பெர்குசன், சான்ட்னர், ரவீந்தரா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவோன் கான்வே 45(42), ரச்சின் ரவீந்தரா 42(34) என அதிரடியாக ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள்.

இதற்கு அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 14, மார்க் சாப்மேன் 7, டேரில் மிட்சல் 43 அதிரடியாக விளையாட முற்பட்டு வெளியேறினார்கள். இதற்கு அடுத்து கிளன் பிலிப்ஸ் 17, டாம் லாதம் 2 ரன்கள் எடுக்க 23.2 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை நியூசிலாந்து பெற்றது.

இந்த பிரம்மாண்ட வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி நல்ல ரன் ரேட் பெற்று இருக்கிறது. பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் இதைவிட மிகப்பெரிய வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். ஆனாலும் அதுவும் சாத்தியமில்லாததாகவே தெரிகிறது.

இதன் மூலம் நடப்பு உலக கோப்பையில் நான்காவது அணியாக நியூசிலாந்து அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் இந்தியாவுடன் மும்பை மைதானத்தில் நியூசிலாந்து அரை இறுதியில் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது!