“மைதானம் கட்டவும் பயிற்சி அளிக்கவும் பிசிசிஐ உதவி செய்யனும்” – ஈரான் பயிற்சியாளர் உருக்கமான வேண்டுகோள்!

0
291
BCCI

இன்றைய கிரிக்கெட் உலகத்தில் மிகப்பெரிய ஆதிக்க சக்தியாக இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் டி20 லீக் ஐபிஎல் தொடர்தான்!

ஐபிஎல் தொடர் மூலம் கிடைக்கும் மிகப்பெரிய வருமானம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தக்கூடிய தனிப்பட்ட அமைப்பாக மாற்றி இருக்கிறது. ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் தங்களுடைய ஆதிக்கத்தை காட்டினாலும் கூட, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அசுர வளர்ச்சியின் முன்னால் அவர்களால் தற்பொழுது எதுவும் செய்ய முடியவில்லை.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அரசு முன்பு ஆப்கானிஸ்தான் அரசுடன் நட்புறவை மேற்கொண்டு வந்த காரணத்தால், அந்த நாட்டில் கிரிக்கெட் வளர்வதற்கு உதவியாக, ஆப்கானிஸ்தான் விளையாடுவதற்கு இந்தியாவில் தனிப்பட்ட முறையில் மைதானத்தை ஒதுக்கி இருந்தது.

இதையெல்லாம் தாண்டி ஆப்கானிஸ்தான் தரப்பில் இருந்து அவர்களை இந்தியாவில் நடைபெறும் ரஞ்சி கிரிக்கெட்டில் ஒரு அணியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டு இருந்தது. இது அவர்களின் உள்நாட்டு கிரிக்கெட்டை வளர்க்கும் என்று அவர்கள் வேண்டுகோள் வைத்திருந்தார்கள்.

தற்பொழுது இதேபோல் ஈரான் தரப்பிடமிருந்து ஈரான் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பயிற்சியாளர் இடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருக்கிறது. 1992 ஆம் ஆண்டு சபகர் தடையற்ற வர்த்தக தொழில்துறை மண்டலம் ஒரு விளையாட்டு கிராமத்திற்கு 40 ஹெக்டர் நிலத்தை ஒதுக்கி இருந்தது. இதற்கு 10 ஹெக்டர் நிலம் கிரிக்கெட் மைதானத்திற்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது ஈரான் மீது அமெரிக்காவின் பொருளாதார தடை நிலவி வருகின்ற காரணத்தினால், அவர்களால் இதற்காக நிதி செலவிட்டு மைதானத்தை கட்டிக்கொண்டு அவர்களது உள்நாட்டு கிரிக்கெட்டை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. எனவே தற்பொழுது ஈரான் தரப்பிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வேண்டுகோள் வந்திருக்கிறது.

ஈரான் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பயிற்சி யாளர் கூறும் பொழுது ” ஈரானிய வீரர்களுக்கு சர்வதேச அளவில் நல்ல கிரிக்கெட்டை விளையாடும் திறமை இருக்கிறது. ஆனால் உள்கட்டமைப்புகள் இல்லாததால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியவில்லை. ஈரானிய வீரர்கள் உலகில் தங்களது திறமையை நிரூபிக்க மைதானத்தைக் கட்டித் தர இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும்.

இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ எங்களது வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். எனவே எங்கள் வீரர்களும் நன்றாக விளையாட முடியும். எங்கள் வீரர்களும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்களது இளம் வீரர்கள் இந்தியாவின் மகேந்திர சிங் தோனி விராட் கோலி இன்னும் பிற இந்திய வீரர்களை ஊக்க சக்தியாக முன்மாதிரியாக கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.