“பிசிசிஐ இந்த வீரருக்கு லாலிபாப் கொடுத்து விளையாடுது.. கூப்பிட்டு பேசனும்!” – ஹர்பஜன்சிங் கடுமையான விமர்சனம்!

0
577
Harbajan

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அதிரடியாக அடுத்த கட்ட வீரர்களை நோக்கி வெகு வேகமாகச் சென்றிருக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று தொடர்களுக்கும் அறிவிக்கப்பட்ட இந்திய அணி இதைத்தான் காட்டுகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெள்ளைப்பந்து தொடர்களுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இல்லை. அதே சமயத்தில் டி20 கிரிக்கெட் இந்திய அணியில் சாகல் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் டெஸ்ட் வடிவத்தில் புஜாரா, ரகானே முழுவதுமாக நீக்கப்பட்டு விட்டார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஜெயிஷ்வாலுக்கு வாய்ப்பு தரவில்லை. அதற்கு பதிலாக அதிரடியாக தமிழகத்தின் இளம் வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரை விட சீனியர் வீரரான தேவ்தத் படிக்கல் ஒரு பக்கத்தில் லிஸ்ட் ஏ போட்டிகளில் நன்றாக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் இப்படியான தேர்வுகள் பலரையும் ஆச்சரியமடைய வைத்திருக்கிறது. அவர்கள் என்ன மாதிரியான பார்வையில் இருக்கிறார்கள் என்பதை ஓரளவுக்கு புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதாவது அவர்கள் மூத்த வீரர்களை புறக்கணிக்கிறார்கள். டி20 கிரிக்கெட்டுக்கு இளம் வீரர்கள் மட்டுமே போதும் என நினைக்கிறார்கள். அத்தோடு மற்ற கிரிக்கெட் வடிவங்களிலும் அதிகப்படியாக இளம் வீரர்களையே விரும்புகிறார்கள்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறும் பொழுது ” சாகல் டி20 கிரிக்கெட் வடிவத்தில் தேர்வு செய்யப்படவில்லை. அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் டி20யில் அவர் இல்லை. பிசிசிஐ அவருக்கு ஒரு லாலிபாப் கொடுத்திருக்கிறது. நீங்கள் நன்றாக விளையாடும் ஃபார்மெட்டில் எடுக்க மாட்டோம், ஆனால் மற்ற பார்மெட்டில் எடுப்போம் என்று சொல்கிறது. இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் ரகானே, புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் நீண்ட காலம் செயல்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களாகவும் இருந்தார்கள். இவர்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அவர்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை அவர்களுக்கான சாத்தியப் பாதை எதுவென்று அவர்களிடம் விளக்கி இருக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் எளிதானது கிடையாது. பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் கடினமான தொடராக இருக்கும். இங்கு அனுபவம் வாய்ந்த புஜாரா, ரகானே ஆகியோர் இல்லை. இளைஞர்கள் வாய்ப்பு பெறுவது நல்ல விஷயம்தான். ஆனால் தேர்வாளர்கள் இவர்களுடன் பேசியதாக நான் நினைக்கவில்லை. உமேஷ் யாதவுடனும் பேசியிருக்க வேண்டும். அவர் எப்பொழுதெல்லாம் விளையாடினாரோ அப்பொழுதெல்லாம் சிறப்பாக விளையாடியிருக்கிறார்!” என்று கூறி இருக்கிறார்!