கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

கம்பீர் விரைவில் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்படுகிறாரா? பிசிசிஐ சொன்ன விளக்கம்

விவிஎஸ் லட்சுமண் புதிய டெஸ்ட் பயிற்சியாளராக கவுதம் கம்பீருக்குப் பதிலாக நியமிக்கப்படுவார் என்ற செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா மறுத்துள்ளார். இந்தக் தகவல்கள் யூகத்தின் அடிப்படையிலானவை, உண்மைக்குப் புறம்பானவை மற்றும் ஆதாரமற்றவை என அவர் தெளிவுபடுத்தினார்.

- Advertisement -

2026 ஆகஸ்டில் இலங்கையில் அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து பிசிசிஐ எந்த முடிவும் எடுக்கவில்லை என சைகியா தெளிவுபடுத்தினார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், “இது முற்றிலும் தவறான மற்றும் யூகத்தின் அடிப்படையிலான செய்தி. புகழ்பெற்ற செய்தி நிறுவனங்களும் வெளியிட்டாலும் உண்மை இல்லை.”

கற்பனையின் விளைவு:

“இது ஒருவரின் கற்பனையின் விளைவு என்பதைத் தவிர இதில் எந்த உண்மையும் இல்லை” என்றார். கம்பீரின் பயிற்சியில் இந்திய அணி டி20 போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. 2025 சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை இந்தியா வெல்ல கம்பீர் வழிநடத்திய நிலையில், 2026 டி20 உலகக் கோப்பையில் கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் உள்ளார்.

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் கம்பீரின் கீழ் அணி பின்தங்கியுள்ளது. 2024 இல் நியூசிலாந்திடம் 0-3 என்ற கணக்கிலும், 2025 இல் தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கிலும் முழுமையாகத் தொடரை இழந்தது. 2024-25 இல் ஆஸ்திரேலியாவிடம் பார்டர்-கவாஸ்கர் டிராபியை 1-3 என இழந்தது.

- Advertisement -

பணிச்சுமை குறைக்கப்படுமா?

இருப்பினும், 2024 இல் வங்கதேசம் மற்றும் 2025 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தலா 2-0 என்ற கணக்கில் வெற்றிகளைப் பதிவு செய்தது. 2025 ஆம் ஆண்டு ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில், சுப்மன் கில் தலைமையிலான அணி 2-2 என்ற சமநிலை கண்டது.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவரான வி.வி.எஸ். லட்சுமண், ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இருந்த காலத்தில், பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் பலமுறை அணிக்குப் பயிற்சியளித்துள்ளார்.

டிராவிட்டின் பதவிக்காலத்திற்குப் பிறகு, கம்பீர் பொறுப்பேற்கும் முன் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் போது லட்சுமண் அணிக்கு பயிற்சியளித்தார். 2024-25 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போதும் பயிற்சியாளராகப் பணியாற்றினார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சைக்கிளில் இந்திய அணி ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன், தற்போது ஆறாவது இடத்தில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: 2025ஆம் ஆண்டின் இந்திய வீரர், வீராங்கனைகளின் சிறந்த 5 செயல்பாடு? இர்பான் பதான் கணிப்பு

தொடர்ச்சியாக WTC இறுதிப் போட்டிகளைத் தவறவிடாமல் இருக்க, சுப்மன் கில் தலைமையிலான அணி 2026 இல் இலங்கை, நியூசிலாந்து தொடர்களிலும், 2027 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் தொடரிலும் சிறப்பான முடிவுகளைப் பெறுவது அவசியம். முந்தைய 2023-25 சுழற்சியில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

- Advertisement -
Published by