ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் மீதமுள்ள போட்டிகள் தொடங்கும் தேதி மற்றும் மைதானம் உள்ளிட்ட விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் காரணமாக ஐபிஎல் 2025 லீக் போட்டிகள் கடந்த சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஐபிஎல் தொடர்
18 வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் இதுவரை மொத்தமாக 57 போட்டிகள் நடைபெற்ற முடிந்து 58வது போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு மீதமுள்ள போட்டிகள் கைவிடப்படுவதாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் தற்போது சீராகி வருவதால் மீண்டும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஆரம்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஆலோசித்து தற்போது போட்டிகள் நடக்கும் தேதியை மீண்டும் அறிவித்துள்ளது.
வருகிற 17-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவின் 6 மைதானங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாவது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூர் மைதானத்தில் வருகிற 17-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. போட்டி நடைபெறும் இடங்களாக பெங்களூர், ஜெய்ப்பூர், லக்னோ,அகமதாபாத், டெல்லி, மும்பை மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்ட தேதி மற்றும் மைதானம்
இதில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் வருகிற 18-ஆம் தேதி மற்றும் 25ஆம் தேதி நடைபெறும் வகையில் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. 27 ஆம் தேதி கடைசி லீக் போட்டியாக லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் தரம்சாலாவில் பாதியில் கைவிடப்பட்ட டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 24-ஆம் தேதி ஜெய்பூரில் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விராட் கோலி இளம் வீரராக இருந்தபோதே.. இந்த 3 விஷயத்தை செய்வார்னு அப்பவே நினைத்தேன் – ஆஸி டேவிட் வார்னர் பேட்டி
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் கடைசி இரண்டு லீக் போட்டிகளில் வருகிற 20-ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராகவும் மற்றும் 25 ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிராகவும் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 27 ஆம் தேதியோடு லீக் போட்டிகள் நிறைவடையும் நிலையில் 29ஆம் தேதி முதல் குவாலிபயர் போட்டிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஆனால் இந்த போட்டிகளுக்கான இடங்கள் இன்னும் தேர்வு செய்யப்படாமல் இருக்கிறது. எனவே இதற்கான இறுதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதில் வருத்தம் அளிக்கும் விஷயமாக சென்னையில் ஒரு போட்டி கூட நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






