பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு தொடருக்கு பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்டு இருக்கும் பயிற்சி முகாமுக்கான மைதானம் திருமண மண்டபம் போல் இருந்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
பாகிஸ்தானில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான் சொந்த நாட்டில் விளையாடுகிறது. இந்த தொடர் வருகின்ற பிப்ரவரி எட்டாம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
தரமற்ற பயிற்சி முகாம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் உள்நாட்டில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நல்ல பயிற்சி போட்டிகள் கிடைப்பதற்காக முத்தரப்பு தொடரை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஏற்பாடு உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மீண்டும் ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் முத்தரப்பு தொடர்கள் நடத்த வேண்டும் என பல நாட்டு ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் முத்தரப்பு தொடருக்கு தயாராக பாகிஸ்தான் அணிக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. முத்தரப்பு தொடரை நடத்துவது என சிறப்பான முடிவெடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆனால் இந்த தொடருக்கு தயாராவதற்கு பாகிஸ்தான் அணிக்கு மிக மோசமான ஏற்பாடுகளை செய்து கொடுத்து மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மைதானமா இல்லை திருமண மண்டபமா?
இதுகுறித்து பேசி இருக்கும் பசித் அலி கூறும் பொழுது “இந்த பயிற்சி போட்டியினால் பாகிஸ்தானுக்கு எந்த பலனும் கிடையாது. பயிற்சிக்கு கொடுக்கப்பட்டிருந்த மைதானம் திருமண மண்டபம் போல் மிக மோசமாக சிறிய அளவில் இருந்தது. பந்து முழங்காலுக்கு மேல் பவுன்ஸ் ஆகக் கிடையாது. முத்தரப்புத் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டிலும் நீங்கள் இப்படியான மைதானம் மற்றும் ஆடுகளத்தை பெற போகிறீர்களா? பயிற்சி போட்டி என்றாலும் ஒழுங்காக ஆட வேண்டும். ஒரு பேட்ஸ்மேன் அவுட் என்றால் அவுட்தான்”
இதையும் படிங்க : ODI தொடர்.. வருண் சக்கரவர்த்தியை வரட்டும்.. இந்த முறை விடமாட்டோம்.. முக்கிய காரணம் இதுதான் – கெவின் பீட்டர்சன் பேட்டி
“இந்த பயிற்சி போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது சில பையன்கள் வெளியில் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள். இது நடத்துவதற்கு லாகூரில் வேறு மைதானமே கிடையாதா? இந்த மைதானத்தில் நேராக விளையாடும் ஒரு வீரர் அவுட் ஆகவே மாட்டார். இந்த மைதானம் கேரம் போர்டு போல இருந்தது. இது அணியின் பயிற்சி முகாம் அல்லது பாகிஸ்தான் 13 வயது சிறுவர் அணிக்கான பயிற்சி முகாமா? இது மிகவும் மோசமான ஏற்பாடு” என விமர்சனம் செய்திருக்கிறார்.