ரொம்ப மோசம்.. “அடிப்படை வசதிகள் கூட செய்து தரலனா எப்படி?” – வெ.இ கிரிக்கெட் வாரியத்தை வெளுத்த ஹர்திக் பாண்டியா!

0
433
Hardik pandya

தற்போதைய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என இரண்டு தொடர்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன.

நாளை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்குகிறது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி அமெரிக்காவில் வைத்து முடிவுக்கு வருகிறது.

- Advertisement -

நேற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்றிருந்த காரணத்தால், தொடரை நிர்ணயம் செய்யும் போட்டியாக மூன்றாவது போட்டி மாறியிருந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கில், இஷான், சஞ்சு மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா நால்வரும் அரை சதங்கள் அடிக்க 351 ரன்கள் வந்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 151 ரன்கள் அவுட் ஆனது. சர்துல் 4 மற்றும் குல்தீப் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்திய அணியின் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் போட்டி முடிந்து பயணப்படுவதில் நிறைய சிக்கல்களை சந்தித்து வருகிறது. முதல் ஒருநாள் போட்டி நடந்த மைதானத்திற்கும் ஹோட்டலுக்கும் இடையே ஒருமணி நேரம் பயணம் செய்வதாக இருந்திருக்கிறது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பார்படாஸ் செல்ல இந்திய அணியினர் டிரினிடாட் விமான நிலையத்தில் இரவு 8 மணிக்கு வந்து சுமார் 6 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு அடுத்து அதிகாலையில்தான் இந்திய வீரர்கள் ஹோட்டலுக்கு வந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்திருந்தார்கள். இனிமேல் எப்பொழுதும் இரவில் நாங்கள் பயணம் செய்ய மாட்டோம் என்று கூறியிருந்தார்கள். இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் வீரர்களை பகலில் பயணம் செய்ய வைத்தது. இதேபோல் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் வீரர்களுடைய லக்கேஜ் வராமல் பெரிய சிரமம் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மிகவும் மந்தமாகச் செயல்பட்டது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ” நாங்கள் விளையாடிய சிறந்த மைதானங்களில் இதுவும் ஒன்று. அடுத்த முறை வெஸ்ட் இண்டீஸ் வரும் பொழுது இங்கு நிலைமைகள் மிகவும் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். பயணம் மற்றும் நேரத்தை நிர்வகிப்பது வரை கடந்த தொடரிலும் நாங்கள் சிக்கல்களை சந்தித்தோம்.

இது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகத்திற்கான நேரம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வீரர்களின் பயணம் மற்றும் நேரத்தை நிர்வகிப்பது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.

நாங்கள் ஆடம்பரத்தை இவர்களிடம் கேட்கவில்லை. அடிப்படை வசதிகளையே கேட்கிறோம். இப்படியான வசதிகளை இவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர குறையாக சொல்ல எதுவும் கிடையாது. மற்றபடி நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தோம்!” என்று கூறியிருக்கிறார்!