பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் போட்டியை தோற்றது மட்டும் இல்லாமல், முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரையும் இழந்து பாகிஸ்தான் அணி தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோற்று வரலாற்றுத் தோல்வியை அடைந்திருக்கிறது.
இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி மிகச் சிறப்பாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது அவர்களுக்கு பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியாக அமைந்தது. தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.
சொந்த நாட்டில் சோகம்
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படவில்லை. இந்த நிலையில் இரண்டாவது நாளில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சையும் அயூப் 58, கேப்டன் ஷான் மசூத் 57 ஆகா சல்மான் 54 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணி 272 ரன்கள் சேர்த்தது. மெஹதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து பங்களாதேஷ அணி தனது முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் சேர்த்தது. அந்த அணி 26 ரன்களில் முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்த பொழுது, லிட்டன் தாஸ் அபாரமாக விளையாடும் 138 ரன்கள், மெஹதி ஹசன் மிராஸ் 78 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் அணியின் தரப்பில் குர்ரம் சேஷாத் ஆறு விக்கெட் கைப்பற்றினார். பாகிஸ்தான அணி கிடைத்த வாய்ப்பை முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் தவறவிட்டது.
மீண்டெழுந்த பங்களாதேஷ் அணி
இந்த நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த அணிக்கு ரிஸ்வான் 43 ஆகா சல்மான் 47 ரன்கள் என இருவர் மட்டுமே தாக்குப் பிடித்து ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக பாகிஸ்தான அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பங்களாதேஷ் தரப்பில் ஹசன் மக்மூத் 5 மற்றும் நாகித் ரானா நான்கு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதைத்தொடர்ந்து 185 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஜாகிர் ஹாசன் 40, சத்மன் இஸ்லாம் 24 ரன்கள் என நல்ல துவக்கத்தை கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து கேப்டன் நஜீமுல் சாந்தோ 38, மோமினுல் ஹக் 34 ரன்கள் என இலக்குக்கு தேவையான பங்களிப்பை செய்தார்கள்.
இதற்கு அடுத்து அனுபவ வீரர்கள் முஷ்பிக்யூர் ரஹீம் 22, ஷாகிப் அல் ஹசன் 21 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க, பங்களாதேஷ் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்தது. மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
இதையும் படிங்க : 6 டீம்.. 2 பிரிவு.. ஏம்பா இத நீ போன மாசமே சொல்லல.. வாகனுக்கு வாசிம் ஜாபர் பதிலடி
பங்களாதேஷ் அணி 2000ஆம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தகுதி பெற்று இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இதற்கு அடுத்து 24 வருடத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல்முறையாக ஒரு டெஸ்ட் போட்டி வெற்றியையும் ஒரு டெஸ்ட் தொடர் வெற்றியையும் பெற்று வரலாறு படைத்திருக்கிறது. மேலும் பாகிஸ்தான் அணி சொந்த நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வரலாற்றுத் தோல்வி அடைந்திருக்கிறது.