பங்களாதேஷ் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
இதில் வங்கதேச அணியின் வெற்றிக்கு மெகதி ஹாசன் மிராஜ் சிறப்பாக வந்து வீசி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்க்கார் அதிரடியாக விளையாடி 32 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர் என 43 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு மிடில் வரிசையில் ஜேக்கர் அலி 27 ரன்கள், மெகதிஹாசன் 26 ரன்கள், சாமீம் ஹுசேன் 27 ரன்கள் குவித்தனர். இதில் சாமீம் ஹுசைன் 13 பந்துகளை எதிர் கொண்டு மூன்று சிக்சருடன் 27 ரன்கள் குவித்திருக்கிறார்.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிரடி ஆட்டக்காரர்களான பிரண்டன் கிங் 1 ரன், நிக்கோலஸ் பூரான் 1 ரன், சேஸ் 7 ரன், பிளக்சர் டக் அவுட் ஆகி வெளியேற இக்கட்டான நிலையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை கேப்டன் ரோமன் போவல் மீட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் அவருக்கு ஒத்துழைப்பு தர மறுத்தனர்.
இதையும் படிங்க:பும்ராவை விட.. இவரோட பவுலிங் சமாளிக்க பதட்டமா இருக்கும் – டிராவிஸ் ஹெட் பேட்டி
இதில் 35 பந்துகளை எதிர்கொண்ட போவல் 5 பௌண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 60 ரன்கள் குவித்தார். இருப்பினும் இறுதிக்கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழக்க 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் வங்கதேச அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதில் வங்கதேச அணியின் மெகதி ஹாசன் 4 ஓவரில் 13 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார்.