ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேனில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் அதிரடி கிரிக்கெட் வீரரான டிராவிஸ் ஹெட் இந்திய பந்துவீச்சு குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
டிராவிஸ் ஹெட் அதிரடி பேட்டிங்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப பிரிஸ்பேனில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிற நிலையில் 75 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி அதற்குப் பிறகு ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோரின் சிறப்பான பார்ட்னர்ஷிப் மூலமாக ஆஸ்திரேலியா அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது.
இருவரும் சேர்ந்து 302 பந்துகளில் 241 ரன்கள் குவித்தனர். பின்னர் இந்த இரண்டு வீரர்களையும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா வீழ்த்தினார். இந்த நிலையில் பும்ராவின் பந்துவீச்சை விட ஜடேஜாவின் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்வதில் பதட்டம் இருப்பதாக டிராவிஸ் ஹெட் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
பும்ராவை விட இவரை எதிர்கொள்வது கடினம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா அற்புதமாக பந்து வீசினார். விக்கெட் எடுக்கும் பந்துகளை துல்லியமாக வீசினார். எப்போதுமே அவருக்கு எதிராக விளையாடும் போது கடினமானதாக இருக்கும். ஸ்மித் உடன் பேட்டிங் செய்வதை ரசித்தேன். அவர் எப்போதும் நன்றாக பேட்டிங் செய்யும்போது நான் கவனிக்கப்படாமல் போகிறேன். அவர் கால்களை நகர்த்தி நன்றாக விளையாடுகிறார், மேலும் அந்த விஷயம் என்னையும் அதுபோல செய்ய தூண்டுகிறது. நான் அதை அனுபவித்து விளையாடுகிறேன். அணிக்காகவும் அணியில் உள்ளவர்களுக்காகவும் நன்றாக விளையாட முயற்சிக்கிறேன்.
இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் பங்களாதேஷ் டி20.. இந்தியாவில் எப்படி பார்க்கலாம்.?. தொடங்கும் நேரம்.. முழு விபரம்
நான் இந்திய அணிக்கு எதிராக போதுமான அளவு விளையாடி விட்டேன். நான் எப்போதுமே எதிரணிக்கு விளையாடும் போது ஒரு திட்டத்தை வைத்திருப்பேன். மேலும் ரவீந்திர ஜடேஜாவின் சுழலுக்கு எதிராக தொடங்குவதற்கு நான் சற்று பதட்டமாக இருந்தேன். ஆனால் அவருக்கு எதிராக விளையாடியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறி இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்கள் குவித்துள்ளது. தற்போது முதல் இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 22 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.






