ஆப்கானை பந்தாடிய பங்களாதேஷ்.. இலங்கைக்கு புதிய தலைவலி.. அடுத்த சுற்றில் யார் இருப்பார்கள் ஆசிய கோப்பையில்?!

0
5766
Bangladesh

இன்று 16வது ஆசியக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட மிகவும் முக்கியமான போட்டி, பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றை நினைத்துப் பார்க்க முடியும் என்ற நிலையில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி இந்த முறையும் தைரியமாக பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

பங்களாதேஷ் அணியின் துவக்க ஆட்டக்காரர் முகமது நைம் 28, டவ்ஹீத் ஹ்ரிடாய் 0 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்த நிலையில் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கை ஓங்கி இருந்தது.

கொஞ்சம் நெருக்கடியான நிலையில் ஜோடி சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் மெகதி ஹசன் மிராஸ் மற்றும் நஜுமுல் சாந்தோ இருவரும் நிதானமாக அதே சமயத்தில் மிக அழகாக இன்னிங்ஸை நகர்த்தி விளையாட ஆரம்பித்தார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்தார்கள்.

தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி பங்களாதேஷ் பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொண்டு திரட்ட ஆரம்பித்தது. இதன் விளைவாக சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். மெஹதி ஹசன் மிராஸ் 119 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 112 ரன்கள் எடுத்து காயத்தால் வெளியேறினார். இந்த ஜோடி 194 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மிகச் சிறப்பாக விளையாடிய நஜிமுல் சாந்தோ 105 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 104 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த அனுபவ வீரர் முஸ்பிகியூர் ரஹீம் 15 பந்துகளில் 25 ரன்கள், சமீம் ஹுசைன் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது.

பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிரடி வீரர் ரகமன்னுல்லா குர்பாஸ் எடுத்ததும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் ஜட்ரன் 74 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 75 ரன்கள் சேர்த்தார்.

இதற்கு அடுத்து வந்த ரஹமத் ஷா 33, ஹஸ்மத்துல்லா ஷாகிதி 51 ரன்கள் குறிப்பிடும்படி எடுத்தார்கள். இறுதியில் ரசித் கான் அதிரடியாக 24 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேனும் நிலைத்து நின்று விளையாடாத காரணத்தால், 44.3 ஓவரில் 245 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணி சுருண்டது.

இதையடுத்து முதல் சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 10 ஓவர்கள் மீதமிருக்க தோல்வி அடைந்திருந்த பங்களாதேஷ் அணி, இந்தப் போட்டியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையும் பெற்று, அடுத்த சுற்றுக்கு ஏறக்குறைய முன்னேறி இருக்கிறது என்று கூறலாம்.

முதல் சுற்றின் கடைசிப் போட்டியில் இலங்கை ஆப்கானிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டியில், பெரிய ரன் அடிப்படையில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தால், தொடரை விட்டு வெளியேற வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது!