பந்து சிக்ஸ் ஆனால் பேட்ஸ்மேன் அவுட் ; ஏன் ரன் தரப்படவில்லை?

0
526
Ipl2023

ஐபிஎல் 16ஆவது சீசன் இரண்டாவது வாரத்தில் தனது முழு வேகத்தை, இன்று பெங்களூர் லக்னோ அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் எட்டி இருக்கிறது. கடைசிப் பந்து வரை பரபரப்பாக நடந்த இந்தப் போட்டி பொதுவான ரசிகர்களுக்குமே விருந்தாக அமைந்தது!

முதலில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யும்பொழுது, அந்த அணியின் கேப்டன் பாப், விராட் கோலி மேக்ஸ்வெல் ஆகியோரது அதிரடி பேட்டிங் பெங்களூர் அணி ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது

- Advertisement -

இதற்கு இருமடங்காக லக்னோ அணி பேட்ஸ்மேன்கள் ஸ்டாய்னிஸ் மற்றும் பூரன் தங்கள் அணி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்கள். குறிப்பாக பூரன் இயந்திர துப்பாக்கியை எடுத்துச் சுட்டது போல பேட்டை வைத்து சிக்ஸர்களாக சுட்டார்.

போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களுக்கு மூன்று விக்கெட் கைவசம் இருக்க, 15 ரன்கள் லக்னோ வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் பர்னலின் 19ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் உனட்கட் சிங்கிள் எடுக்க, அடுத்த பந்தில் இளம் வீரர் பதோனி அபாரமாக பவுண்டரி அடித்தார். அப்பொழுது வெற்றிக்கு ஒன்பது பந்துகளில் 7 ரன்கள்தான் தேவைப்பட்டது.

இப்படியான சூழலில் பதோனி திரும்பி பந்தை அடிக்க பந்து சிக்ஸருக்கு சென்றது ; ஆனால் பின்பக்கம் திரும்பி அடித்த பதோனி பேட்டை மோதி ஸ்டெம்பில் ஹிட் விக்கெட் ஆகிவிட்டார். அதே சமயத்தில் அவர் அடித்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

- Advertisement -

ஏன் இந்த சிக்ஸர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், அவர் பந்தை அடித்த நிகழ்வு அதாவது சிக்ஸர் முழுமை அடையவில்லை. பந்து சிக்ஸராக மாறுவதற்கு முன்பாகவே, பந்தை அடித்த இவரது இயக்கம் நிற்பதற்கு முன்பாகவே, பேட் ஸ்டெம்ப் மீது பட்டுவிட்டது. இப்படி இயக்கம் முற்றுப்பெறாமல், அந்த நேரத்தில் எது நடக்கிறதோ, அதைத்தான் நடுவர்கள் அறிவிப்பார்கள். எனவே இந்த சிக்சர் வழங்கப்படவில்லை. ஆனாலும் பரபரப்பான இந்த போட்டியில் லக்னோ அணி இறுதிப்பந்தில் வெற்றி பெற்றது!