“பாபர் சரியில்ல.. இதே பாகிஸ்தான் டீம தோனிகிட்ட கொடுத்தா கப் அடிப்பாரு!” – இந்திய முன்னாள் வீரர் வித்தியாசமான பேச்சு!

0
2448
Dhoni

நடப்பு உலகக்கோப்பை தொடர் நிறைய கிரிக்கெட் வாரியங்களில் பெரிய பிரச்சனைகளை உண்டாக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளும், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து போன்ற சிறிய அணிகள் மட்டுமே நெருக்கடிகளைத் தவிர்த்து இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய அணிகள் பெரிய சரிவை சந்தித்திருக்கின்றன. இதன் காரணமாக அந்த நாட்டின் கிரிக்கெட்டுக்குள் புயல் அடித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த நாடுகளின் கிரிக்கெட் அமைப்புகளில் பெரிய மாற்றங்கள் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வகையில் நடப்பு உலகக்கோப்பை தொடர் பாகிஸ்தான் அணிக்கு மட்டுமல்லாது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரிய நெருக்கடியை கொண்டு வந்த உலகக்கோப்பையாக இருக்கிறது. தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து இன்சமாம் தற்பொழுது ராஜினாமா செய்திருக்கிறார்.

அதே நேரத்தில் கேப்டன் பாபர் அசாம் பதவி உலகக் கோப்பைக்கு பிறகு இருக்குமா என்பதும் தெரியாது. அவர்களின் உலகக்கோப்பை தொடர் தோல்விகள் பெரிய பிரச்சனைகளை அந்த நாட்டில் உருவாக்கி இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி அவர்களுக்கு வாழ்வா சாவா என்று அமைந்திருக்கிறது. மேலும் நியூசிலாந்து அணி இலங்கை அணி உடன் தோற்க வேண்டியதும் அவசியம்.

- Advertisement -

இந்த நிலையில் பாபர் அசாம் பற்றி பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறும் பொழுது “கேப்டனாக பாபர் அசாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அவர் முனைப்புடன் இருக்க வேண்டும் மேலும் ஒரு படி மேலே சிந்திக்க வேண்டும். உதாரணமாக சதாப் கான் ரிதம் இல்லாமல் இருந்த பொழுது, அவரைத் தொடர்ந்து பாபர் பயன்படுத்தினார்.

சரியாக பந்து வீச முடியாமல் திணறக்கூடிய வீரர்களை நீக்குவது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஒரு செயல் திறன் உள்ள கேப்டன் இருப்பதும் முக்கியம். பாபர் இருப்பதைத் தாண்டி சிந்திக்க வேண்டியது அவசியம். சூழ்நிலைக்கு ஏற்ப அவர் தனது திட்டங்களை மாற்றி அமைக்க தயாராக இருக்க வேண்டும்.

சில சமயங்களில் களத்தில் சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும் பொழுது நம்முடைய ஆரம்ப திட்டத்திற்கு எதிராக வேறொரு திட்டத்தில் நாம் செல்ல வேண்டும். நான் சவால் விட்டு சொல்கிறேன், இதே பாகிஸ்தான் அணியை மகேந்திர சிங் தோனி கையில் கொடுத்தால், இந்த அணி வெற்றிப்பாதையில் இருக்கும்.

பாபர் அழுத்தத்தில் இருக்கும் சிறந்த வீரர். பாகிஸ்தானின் மொத்த தோல்விகளுக்கு அவரை மட்டுமே குற்றம் சாட்டுவது சரி கிடையாதுதான். சச்சின் டெண்டுல்கர் ரோஹித் சர்மா போன்றவர்கள் வரிசையில் நிச்சயம் அவருக்கு இடம் உண்டு. இந்தத் தசாப்தத்தின் மிகச் சிறந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அவர்தான்!” என்று கூறி இருக்கிறார்!