அக்சர் படேல் சூரியகுமார் போராட்டம் வீண் ; வென்றது இலங்கை அணி!

0
206
Ind vs Sl

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டசன் சனகா தலைமையிலான இலங்கை அணி உடன் உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்று தொடரில் முன்னிலை வகித்திருந்தது!

இந்த தொடரில் இன்று தொடங்கிய இரண்டாவது போட்டியில் புனே மைதானத்தில் டாசை வென்று இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இலங்கை அணியின் தொடக்க ஜோடி பதும் நிசாங்கா மற்றும் குசால் மெண்டிஸ் முதல் விக்கட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். குசால் மெண்டிஸ் 52 ரன்கள் பதும் நிசாங்கா 33 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த ராஜபக்சே, தனஞ்செய டி சில்வா இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

ஆனாலும் இன்னொரு புறத்தில் அசலங்கா அதிரடியாக 37 ரன்கள் எடுத்தார். கேப்டன் சனகா மின்னல் வேகத்தில் விளையாடி 22 பந்துகளில் 56 ரன்கள் குவித்து மிரட்டினார். 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. இஷான் கிஷான் இரண்டு ரன்கள், சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் தலா 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்கள். அடுத்து வந்த கேப்டன் ஹரிதிக் பாண்டியாவும் 12 ரன்னில் வெளியேறினார்.

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் அக்சர் படேலும் இணைந்து ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடிய அணியை சரிவிலிருந்து மீட்டார்கள். இதற்கு அடுத்து அக்சர் படேல் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அதிரடியில் ஈடுபட்டார். இதற்கு அடுத்து சூரியகுமாரும் வழக்கமான அதிரடியில் இணைந்தார்.

ஒரு கட்டத்தில் இருவரும் அரை சதத்தை கடக்க இந்திய அணி கடைசி ஐந்து ஓவர்களில் 70 ரன்கள் அடித்தால் போதும் என்ற நிலைக்கு வந்தது. ஆனால் அதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அப்படியே எல்லாம் தலைகீழாக மாறிப்போனது.

ஆனாலும் சிவம் மாவி இறுதி நேரத்தில் அக்சர் பட்டேலுடன் இணைந்து ஒரு சிறிய அதிரடியில் ஈடுபட இந்திய அணிக்கு கொஞ்சம் வெற்றி வெளிச்சம் தெரிந்தது. ஆனால் 19, 20 ஓவர்கள் சிறப்பாக வீசப்பட இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. மிகச் சிறப்பாக விளையாடிய அக்சர் படேல் 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 65 ரன்கள் குவித்து இறுதி ஓவரில் ஆட்டம் இழந்தார். தற்பொழுது தொடர் 1-1 என சமநிலை வகிக்கிறது!