இந்திய அணியில் இருந்து தன்னை நீக்கி விடுவார்கள் என்கின்ற பயம் தனக்கு எப்பொழுது நீங்கியது என்பது குறித்து இந்திய டி20 அணியின் துணை கேப்டன் அக்சர் படேல் கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக அக்சர் படேல் மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். முதலில் அவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டு பிறகு கில் அணிக்குள் வந்ததும் பொறுப்பு பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராகவும் இருந்த காலகட்டத்தில், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவருமே ஒரே மாதிரி பந்து வீசக்கூடியவர்களாக இருந்தாலும், பேட்டிங் வரிசையை எட்டு வரையில் நீட்டிப்பதற்காக இருவரையும் அணிக்குள் வைக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 2023 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது அக்சர் படேல் காயம் அடைந்ததால் வெளியேறினார்.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தை மாற்றாமல் அப்படியே டி20 உலகக் கோப்பைக்கு அடுத்த ஆண்டு எடுத்துச் சென்றார்கள். இதில் ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் படேல் இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு பெரிய பங்கை கொடுத்திருந்தார். குறிப்பாக பந்துவீச்சு தாண்டி பேட்டிங்கில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விக்கெட் சரிவுக்கு மத்தியில் வந்து அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்தி விராட் கோலிக்கு நல்ல ஆதரவாக இருந்தார்.
இதுகுறித்து அக்சர் படேல் பேசும் பொழுது “டி20 உலக கோப்பைக்கு முன்பாக ஜட்டு பாய்க்கு பதிலாக என்னை இந்திய அணி நிர்வாகம் பார்க்கவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். அதே சமயத்தில் எனக்கும் அணிக்குள் ஒரு இடத்தை உருவாக்கினார்கள். ஜட்டு பாய் நானும் சேர்ந்து விளையாடும் நிலைமை அங்கிருந்து உருவானது”
இதையும் படிங்க : மெக்கலம் மாறப்போவது கிடையாது.. அவர் சொன்ன இந்த விஷயத்தை கவனிச்சீங்களா – அஸ்வின் கருத்து
“நான் ஜட்டு பாய்வுடன் ஒருமுறை கூட போட்டியிடவில்லை. நான் அவரை போட்டியாக நினைக்கவில்லை. மாறாக பயிற்சி செய்யும் பொழுது என்னுடைய ஆட்டத்தில் என்ன சேர்க்கலாம் என்று தான் யோசிப்பேன். ஏனென்றால் என்னை அவர்கள் அணியை விட்டு நீக்கி விடக்கூடாது என்று நான் பார்த்தேன். ஆனால் 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு அவர்கள் என்னை அணியை விட்டு நீக்கி விடுவார்கள் என்கின்ற எண்ணமே போய்விட்டது” என்று கூறியிருக்கிறார்.