நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வெற்றி பெற்றாலும், தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இலங்கை அணியை ஆல் ரவுண்டர் அக்சார் பட்டேல் அதிரடியாக விளையாடிய நிசாங்காவை வெளியேற்றினார். அதற்குப் பின்னர்தான் இலங்கை அணி சரிந்தது. இந்த போட்டியில் விளையாடிய விதம் குறித்து அக்சார் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் அபாரமான செயல்பாட்டால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. இதில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிகபட்சமாக 26 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி தொடக்கத்தில் மிக அபாரமாக விளையாடியது. குஷால் மெண்டிஸ் மற்றும் நிஷாங்கா ஆகியோர் 8.4 ஓவர்களில் முதல் விக்கட்டுக்கு 84 ரன்கள் குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த கூட்டணியை ஒரு வழியாக சுழற் பந்து வீச்சாளர் அக்ஷார் பட்டேல் உடைத்தார். 79 ரன்கள் குவித்த நிஷாங்காவை தனது பந்துவீச்சு மூலம் வெளியேற்றினார்.
அதுமட்டுமல்லாமல் குஷால் பெரேராவின் விக்கெட் வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் பிறகு இலங்கை அணி சரிவை நோக்கி சென்றது. மற்ற பந்துவீச்சாளரின் அபாரமான பந்துவீச்சினால் இலங்கை அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த வெற்றி குறித்து அக்சார் பட்டேல் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அக்சார் விரிவாக கூறும்போது “நான் 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். வித்தியாசமான கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் விளையாடி இருக்கிறேன். நான் பெரிய மாற்றம் எதையும் உணரவில்லை. இந்திய அணிக்காக நீங்கள் தொடர்ந்து விளையாடும்போது அழுத்தமான சூழ்நிலைகளில் மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும் என்பது உறுதி. இந்த நம்பிக்கையானது எனது பலத்தோடு விளையாடுவதற்கும், மேலும் அமைதியாக இருந்து செயல்படுவதற்கும் உதவி புரிகிறது. குறிப்பாக டி20 உலக கோப்பையில் எனக்கு கிடைத்த அனுபவம் சிறப்பாக செயல்பட முன்னோக்கி நகர்த்துகிறது.
இதையும் படிங்க:2வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. கம்பீர் டீமை மாற்றுவாரா?.. சாம்சானுக்கான வாய்ப்பு
நாங்கள் டீம் மீட்டிங்கில் பேசும் போது கூட கேப்டனும், பயிற்சியாளரும் நாங்கள் வேண்டுமானால் மாறலாம் ஆனால் அணியில் விளையாடும் 11 அல்லது 15 வீரர்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கூறுவார்கள். ஒவ்வொரு பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் வித்தியாசமான சிந்தனைகள் நிச்சயமாக இருக்கும். ஆனால் விளையாட்டு என்பது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். சூர்யா எப்போதுமே பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். கேப்டன் உங்களை ஆதரிக்கும் போது உங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கும்” என்று கூறியிருக்கிறார்.






