நேற்று இந்திய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் இந்திய அணி வெற்றிக்கு தகுதியானது எனவும் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் பேசியிருக்கிறார். மேலும் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்தும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் செமி பைனல் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இறுதியாக இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஏமாந்து போன ஆஸ்திரேலியா
இதே மைதானத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் விளையாடிய போட்டியின் போது ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு மிக அதிகபட்ச ஒத்துழைப்பை கொடுத்தது. மேலும் ஆடுகளம் மெதுவாக இருந்ததால் வேகப்பந்து வீச்சுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தது. இதனை நம்பிய ஆஸ்திரேலியா இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் என இந்தியாவின் பாணியில் வந்தது.
இந்த நிலையில் நேற்று போட்டிக்கு கொடுக்கப்பட்ட புதிய ஆடுகளம் மெதுவாக இருந்த போதிலும் பந்து பெரிய அளவில் திரும்பும்படி இல்லை. இதனால் அவர்களுடைய ஸ்பின்னர்கள் ஆட்டத்திற்கு வர முடியாமல் போய்விட்டது. அதே சமயத்தில் இந்திய ஸ்பின்னர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதால் ஆஸ்திரேலியா அணியை முடிந்தவரை கட்டுப்படுத்தினார்கள். இந்த இடைவெளிதான் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.
ஒரே மைதானத்தில் விளையாடுவது நன்மையா?
இது குறித்து பேசி இருக்கும் ஸ்மித் கூறும் பொழுது “இங்குள்ள ஆடுகளம் அவர்களிடம் இருக்கும் ஸ்பின்னர்கள் மற்றும் சீமர்கள் இருவருக்கும் ஏற்றதாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இங்கு நல்ல கிரிக்கெட் விளையாடினார்கள். எனவே நான் ஒரே மைதானத்தில் விளையாடுவது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நன்றாக விளையாடி எங்களை வீழ்த்தியிருக்கிறார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்”
இதையும் படிங்க : துபாயில் ஆடுவதால் எந்த நன்மையும் இல்லை.. குழந்தை மாதிரி அழுகாம வளருங்க – கம்பீர் விமர்சனம்
“இந்த போட்டியில் அவர்கள் துரத்த வேண்டிய ரன் விகிதத்தை எப்பொழுதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். நாங்கள் ஒரு இரண்டு விக்கெட் பின்னோக்கி இருந்தோம். இறுதியில் நாங்கள் அதற்குள் வந்தோம். ஆனால் அந்த இடத்தில் கே.எல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை முடித்து விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.






