நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி ஒரே மைதானமாக துபாயில் விளையாட வருவதால் தங்களுக்கு எந்தவித நன்மையும் கூடுதலாக கிடைக்கவில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
நேற்று இந்திய அணி அரையிறுதியில் துபாய் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இறுதியில் 48.1 ஓவரில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி மீதான விமர்சனம்
இந்திய அணி நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் தங்களுடைய அனைத்து போட்டிகளையும் துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடுகிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு மைதானத்தின் கண்டிஷன் பழகி விடுகிறது எனவும், ஒரே மைதானத்திற்கு தகுந்த 15 பேர் கொண்ட அணியை தேர்ந்தெடுக்க முடிகிறது எனவும், பயண அலைச்சல் இல்லாமல் வீரர்கள் புத்துணர்வாக இருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
குறிப்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் ஆதர்டன் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்கள். மேலும் இந்த தொடரில் விளையாடாத ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இதே குற்றச்சாட்டை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தொட்டில் குழந்தை போல் இருக்காதீர்கள்
இது குறித்து பேசி இருக்கும் கம்பீர் கூறும் பொழுது “முதலில் இது மற்ற அணிகளைப் போலவே எங்களுக்கும் நடுநிலையான இடம். நாங்கள் இந்த மைதானத்தில் கடைசியாக எப்பொழுது விளையாடினோம் என்பது கூட நினைவில் இல்லை. நாங்கள் இத்தனை ஸ்பின்னர்களை இந்த மைதானத்திற்காக கொண்டு வரவில்லை. நாங்கள் பாகிஸ்தானில் விளையாடியிருந்தாலும் இரண்டு பிரதான ஸ்பின்னர்களை வைத்து விளையாடி இருப்போம். ஏனென்றால் துணை கண்டத்தில் நடக்கும் போட்டி.
இதையும் படிங்க : மக்கள் என்னை சீக்கிரம் மறந்துடுறாங்க.. இன்னும் என்னால என்ன செய்ய முடியும்னு யோசிக்கணும் – விரக்தியில் கேஎல் ராகுல்
“இந்திய அணிக்கு தேவையற்ற நன்மைகள் கிடைப்பதாக வெளியில் விமர்சனங்கள் செல்கிறது. என்ன தேவையற்ற நன்மைகள் கிடைக்கிறது? நாங்கள் இந்த மைதானத்தில் ஒருநாள் கூட பயிற்சி செய்யவில்லை. நாங்கள் ஐசிசி அகாடமியில் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். அங்கும் இங்கும் உள்ள ஆடுகளங்களுக்கு வானத்துக்கும் தரைக்குமான வித்தியாசம் இருக்கிறது. இது குறித்து பேசக்கூடிய சிலரெல்லாம் இன்று வரை வளராத தொட்டில் குழந்தைகள். அவர்கள் வளர வேண்டும். எங்களுக்கு இங்கு எந்த கூடுதல் நன்மையும் கிடைக்கவில்லை. நாங்கள் அதற்காக இங்கு திட்டமிடவும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.






