இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட வரும் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது சுலபமானது என ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியிருக்கிறார்.
நாளை மறுநாள் இந்தியா அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மும்பை மைதானத்தில் விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சவால்
தற்போது இந்திய அணியின் கைவசம் மொத்தம் ஆறு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இதில் 5 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களது நாட்டில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இதன் காரணமாகவே இந்திய அணிக்கு ஒரு புதிய அழுத்தம் உருவாகி இருக்கிறது.
தற்போது இந்திய அணி தான் விளையாட இருக்கும் 6 டெஸ்ட் போட்டிகளில் நான்கு டெஸ்ட் போட்டிகளை வென்றாக வேண்டும். அப்பொழுதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்திய அணியை எதிர்கொள்வது சிரமம் இல்லை
இது குறித்து பேசி இருக்கும் பேட் கம்மின்ஸ் கூறும்போது ” சொந்த நாட்டில் விளையாடும் பொழுது நான் உட்பட எல்லா ஆஸ்திரேலியர்களும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் சொந்த நாட்டில் விளையாடும்போது எல்லாம் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறோம்”
“நாங்கள் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களை இழந்திருக்கிறோம். இது மிகப்பெரிய விஷயம். நாங்கள் தற்போது நல்ல நிலையில் இருக்கிறோம். நாங்கள் சிறப்பாக செயல்பட முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. நாங்கள் யாருக்கு எதிராகவும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க : நியூசி டெஸ்ட் தொடர்.. கோலி மனநிலை மாறிடுச்சு.. இதுல அவசரப்படுறதுனால சீக்கிரம் அவுட் ஆகுறாரு – ஆஸி பிராட் ஹாக் பேட்டி
“ஒரு அணி அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு எதிராக விளையாடுவது சிரமமான விஷயம் கிடையாது. தற்பொழுது இந்திய அணி அப்படித்தான் இருக்கிறது. ஆனால் இங்கு வந்து சிறப்பாக செயல்பட்டும் இருக்கிறார்கள். எங்கள் வேலை அவர்களை அமைதியாக்குவது மற்றும் நாங்கள் சிறப்பாக செல்வது” என்று கூறியிருக்கிறார்.