இன்று ஆசஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்திருக்கிறது.
தற்போது அடிலைடு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் முதல் இரண்டு போட்டிகளை ஆஸ்திரேலியா வென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியை வென்றால் தொடரையும் வென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கு முன்பாக உடல் நலக்குறைவு ஏற்பட்ட ஸ்மித் திடீரென விலகினார். இதைத்தொடர்ந்து முதலில் விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 10, ஜாக் வெதரால்ட் 18, லபுசேன் 19 , கிரீன் ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினார்கள். இதைத் தொடர்ந்து 94 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.
இந்த போட்டியில் ஸ்மித் விளையாடாததால் களம் இறங்கிய உஸ்மான் கவாஜா மிகச் சிறப்பாக விளையாடி 126 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோஸ் இங்லீஷ் 32, மிட்சல் ஸ்டார்க் ஆட்டம் இழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்கள்.
இன்னொரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி சதம் அடித்து 143 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நடப்பு டெஸ்ட் சீசனில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிக ரன்கள் எடுத்த வீரராக புதிய ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். இன்றைய நாள் முடிவில் ஆஸ்திரேலியா எட்டு விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்து இருக்கிறது.
இதையும் படிங்க : சிஎஸ்கே என்கிட்ட பேசி இருந்தாங்க.. ஆனா இவ்வளவு எதிர்பார்க்கல.. தோனி சார் கிட்ட இது வேணும் – பிரசாந்த் வீர் பேட்டி
மேலும் இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 3, பிரைடன் கார்ஸ் மற்றும் வில் ஜேக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதில் பகுதி நேர பந்துவீச்சாளரான வில் ஜேக்ஸ்க்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்து இருபது ஓவர்கள் பந்து வீச விட்டு, அவர் 102 ரன்கள் கொடுத்திருக்கிறார். இங்கிலாந்தின் இந்த மோசமான திட்டத்தால் ஆஸ்திரேலியா எளிதாக ரன்கள் குவித்து இருக்கிறது.