நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 351 ரன்கள் துரத்தி வெற்றி பெற்றதில் தன் அணியின் இரண்டு விக்கெட் கீப்பர்கள் பேட்டிங் பற்றி ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாராட்டி பேசி இருக்கிறார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தது. இதை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்லீஷ் அபாரமாக விளையாடி சதம் அடித்து அணியை வெல்ல வைத்தார். இவருடன் இணைந்து விளையாடிய இன்னொரு விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அரைசதம் அடித்தார்.
ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய விக்கெட் கீப்பராக செயல்படும் ஜோஸ் இங்லீஷ் இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் பிறந்தவர். அவரிடம் தற்போதும் இங்கிலாந்து பாஸ்போர்ட் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்தவரான அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்றைய போட்டியில் ஆறாவது வீரராக களம் இறங்கிய ஜோஸ் இங்லீஷ் இறுதிவரை நின்று 86 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 120 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக முன்னணி வீரர்கள் 5 பேர் விளையாடாத நிலையிலும் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை பலப்படுத்தி இருக்கிறது.
நேற்றைய போட்டி குறித்து பேசி இருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறும்பொழுது ” எங்கள் அணியில் இருக்கும் இரண்டு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்களும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். ஜோஸ் இங்லிஷ் இரண்டாவது கியரில் இருந்து மாறவே இல்லை. அவர் மைதானம் முழுவதும் ஷாட் விளையாடி அசத்தினார். தற்போது அவரிடம் இங்கிலாந்து பாஸ்போர்ட் இருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால் அவர் எங்களை விட்டு எங்கேயும் செல்லவில்லை”
இதையும் படிங்க : தன் மகனுடன் களம் இறங்கிய ராகுல் டிராவிட்.. தந்தைய தாண்டி அசத்திய மகன்.. ரசிகர்களுக்கு விருந்து படைத்த போட்டி
“நாங்கள் பயிற்சி செய்த பொழுது இரவில் எவ்வளவு ஈரமாக இருந்தது என்பது குறித்து கவலைப்படாமல் நாங்கள் முதலில்தான் பந்துவீசி இருப்போம். இந்த குறிப்பிட்ட ஆடுகளம் முதல் இன்னிங்சிலேயே மெதுவாக ஆரம்பித்துவிட்டது. எங்களால் 350 ரன்கள் துரத்த முடியும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 400 ரன்கள் எடுக்கும் நிலையில் இருப்பதாகவும் நினைத்தோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் திறனை நம்பினோம். நாங்கள் சரியான நேரத்தில் வேகத்தை அதிகப்படுத்தினோம் வென்றோம்” என்று கூறி இருக்கிறார்.