இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் பார்படாஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஒமான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. ஒமான் அணியின் கேப்டன் பேச்சுக்கு ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் பதிலடி கொடுத்திருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் வந்தார்கள். இதில் டிராவிஸ் ஹெட் 10 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து கேப்டன் மிட்சல் மார்ஸ் 21 பந்தில் 14 ரன்கள், மேக்ஸ்வெல் வழக்கம் போல் கோல்டன் டக் என வெளியேறினார்கள். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்ற டேவிட் வார்னர் 51 பந்துகளில் பொறுமையாக 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆஸ்திரேலியா தடுமாற்றமான சூழலில் இருந்தது.
இந்த நிலையில் இறுதி கட்டத்தில் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 36 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 4 பந்தில் 9 ரன்கள் எடுத்தார். பேட்டிங் செய்ய கொஞ்சம் கடினமான மெதுவான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஓமான் தரப்பில் மெக்ரான் கான் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.
இலக்கை நோக்கி விளையாடிய ஒமான் அணி ஆஸ்திரேலியா பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. கேப்டன் அக்யூப் இலியாஸ் 18 பந்தில் 18 ரன், அயான் கான் 30 பந்தில் 36 ரன், மெக்ரான் கான் 16 பந்தில் 27 ரன் எடுத்தார்கள். ஓமான் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய பந்துவீச்சு தரப்பில் ஸ்டார்க், எல்லீஸ் மற்றும் ஜாம்பா மூவரும் தலா இரண்டு விக்கெட், ஸ்டோனிஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : ஐந்து மாசம்தான் ஆகுது.. பாகிஸ்தான் போட்டிக்கு இந்த விஷயத்துல என்ன செய்யறதுனு தெரியல – ரோகித் சர்மா பேச்சு
இந்த போட்டிக்கு முன்பாக பேசியிருந்த ஒமான் அணியின் கேப்டன் ஆஸ்திரேலியா அணியில் நல்ல டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேன்கள் இல்லை என்றும், ஆடுகளம் மெதுவாக இருந்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் என்றும், அவர்கள் தங்களிடம் கற்றுக் கொள்ள விஷயங்கள் இருப்பதாகவும் பேசி இருந்தார். தற்போது ஒமான் அணிக்கு ஆஸ்திரேலியா பாடம் நடத்தி இருக்கிறது.