அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா ; இந்தியா சொதப்பல் பந்துவீச்சு!

0
193
Australia

இந்திய அணி இன்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் பஞ்சாபில் மொகாலி நகரில் மோதியது. ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு இந்தத் தொடர் முக்கியமானதாகும்!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் சிங்கப்பூர் நாட்டிற்காக விளையாடிய டிம் டேவிட் அறிமுகம் ஆனார். இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக நீண்ட நாட்களுக்கு பிறகு உமேஷ் யாதவ் இந்திய வெள்ளைப் பந்து அணியில் இடம் பெற்றார்.

- Advertisement -

இந்திய அணிக்கான பேட்டிங்கை துவங்க களம் புகுந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ரோகித் சர்மாவின் அதிரடி நீடிக்கவில்லை அதேபோல விராட் கோலியும் களத்தில் நீடிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து விளையாடிய கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய சூரியகுமார் யாதவும் மிகச் சிறப்பாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார்.

இவர்களுக்கு மத்தியில் களம் புகுந்த ஹர்திக் பாண்டியா ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை பேட்டிங்கில் உருவாக்கினார். வெறும் முப்பது பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் ஐந்து சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்களை குவித்து பிரமாதப் படுத்தினார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 208 குவித்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் களம் இறங்கினார்கள். ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணியின் அதிரடி சரவெடியாக இருந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சீக்கிரத்தில் வெளியேற, இன்னொரு துவக்க ஆட்டக்காரர் இளம் வீரர் கேமரூன் கிரீன் இந்திய பந்து வீச்சை நொறுக்கி தள்ளிவிட்டார். வெறும் 30 பந்துகளில் 4 சிக்ஸர் 8 பவுண்டரிகளுடன் 61 குவித்து அட்டகாசப்படுத்தினார்.

- Advertisement -

இவர் அக்சர் படேல் ஓவரில் ஆட்டமிழக்க, அடுத்து உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணியின் பக்கம் ஆட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் மற்றும் டிம் டேவிட் இருவரும் இந்திய அணியின் வெற்றி கனவை சிதைத்து விட்டார்கள். மேத்யூ வேட் 21 பந்துகளில் 45 ரன்களை இரண்டு சிக்சர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் நொறுக்கி இறுதிவரை களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தார். முடிவில் ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பந்து வீச்சில் அக்சர் படேல் மட்டும் மிகச் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற யாரும் 10 ரன்களுக்கு கீழ் கொடுக்கவே இல்லை. இதில்லாமல் கேமரூன் கிரீன் மற்றும் ஸ்மித்துக்கு கைக்கு வந்த கேட்சை விட்டு ஆட்டத்தையும் தொலைத்து விட்டார்கள். இதையடுத்து இரண்டாவது ஆட்டம் வருகின்ற இருபத்தி ஐந்தாம் தேதி நடக்க இருக்கிறது.