ஆஸ்திரேலியா பிரபல ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்து சாம்பியன்ஸ் டிராபி ஆஸ்திரேலியா அணியில் இருந்தும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபி அணிக்கு மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜனவரி 13ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் திடீரென பிப்ரவரி 6ம் தேதி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாட மாட்டேன் என்று கூறி இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியின் முக்கிய அங்கம்
தற்போது ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஸ், கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக சாம்பியன் டிராபியில் விளையாடாத நிலையில் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமாக இருக்கும் என கருதப்பட்டது. மேலும் ஆட்டத்தை முடிக்கக்கூடிய இடத்தில் அனுபவ வீரராக இருப்பதால் இவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் இவர் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் பேசும் பொழுது ” கடந்த காலத்தில் எங்களுடைய ஒருநாள் கிரிக்கெட் அமைப்பில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் முக்கிய பகுதியாக இருந்தார். அவர் விலைமதிப்பற்ற வீரராக மட்டும் இல்லாமல் குழுவில் மிகவும் முக்கியமானவராகவும் இருந்தார். அவர் இயல்பாகவே தலைமைத்துவம் கொண்ட வீரராகவும் அதே சமயத்தில் பிரபலத்தன்மை கொண்ட வீரராகவும் இருந்தார். சிறந்த மனிதரான அவருடைய ஒருநாள் கிரிக்கெட் சாதனைகளை நினைவுகூர்ந்து வாழ்த்துவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
ஓய்வுக்கான காரணம் என்ன?
ஓய்வு குறித்து பேசி இருக்கும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறும்பொழுது “ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது நம்ப முடியாத ஒரு பயணமாகும். மேலும் அணியின் பச்சை மற்றும் தங்க நிற ஜெர்சியை அணிந்து விளையாடிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் நாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதை நான் எப்பொழுதும் உயர்வாக போற்றுவேன்”
இதையும் படிங்க : நான் பெரிய சிக்ஸ் அடிக்க காரணம் அவர்தான்.. எனக்கு இந்த ஒரு ஆசை ரொம்ப நாளா இருக்கு – ஜெய்ஸ்வால் பேட்டி
“இது எளிதான முடிவு கிடையாது. அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் அடுத்த முக்கிய அத்தியாயத்தில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனக்கு ஆஸ்திரேலியா தலைமை பயிற்சியாளர் உடன் நல்ல நட்பும் உறவும் இருக்கிறது. அவர் எனக்கு தந்த ஆதரவை நான் பெரிதும் பாராட்டுகிறேன். மேலும் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணியினரை நான் உற்சாகப்படுத்துவேன்” என்று கூறி இருக்கிறார்.






