22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் சாதிக்க ஆஸிக்கு வாய்ப்பு; பரபரப்பான கட்டத்தில் ஆசஸ் 5வது டெஸ்ட்!

0
367
Ashes2023

இங்கிலாந்தில் தற்பொழுது ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது!

இந்த தொடரில் முதலில் நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் ஆஸ்திரேலியா அணியும் ஒன்றில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருக்க, நான்காவது டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனது. இதன் காரணமாக ஐந்தாவது போட்டி நடக்கும் முன்பே ஆஸ்திரேலியா அணி ஆசஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது!

- Advertisement -

இதற்கு அடுத்து நான்கு நாட்களுக்கு முன்னால் தொடரின் கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஆரம்பித்தது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஹாரி புரூக் அதிரடி அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அடுத்து தமது முதல் இன்னிசை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் எடுத்து பன்னிரண்டு ரன்கள் முன்னிலை பெற்றது. வோக்ஸ் மூன்று விக்கட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி வழக்கமான பாணியில் அதிரடியாக விளையாடியது. அந்த அணிக்கு ஜாக் கிரவுலி, ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ மூவரும் அதிரடியாக அரை சதங்கள் அடிக்க 395 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டார்க் மற்றும் மர்பி தலா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இலக்கை நோக்கி போட்டியின் நான்காவது நாளான இன்று விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவஜா இருவரும் விக்கெட்டை தராமல் அரை சதங்கள் அடித்து 135 ரன்கள் ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தபோது மழை குறுக்கீடு காரணமாக, இன்றைய நாளின் போட்டி முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 249 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 10 விக்கெட் இருக்கிறது.

இந்த போட்டியை ஆஸ்திரேலிய அணி வெல்லும் பட்சத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற சாதனையைப் படைக்கும். இதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆசஸ் தொடரை ஆஸ்திரேலியா அணி 4-1 என கைப்பற்றி இருந்தது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணி நாளை வெல்லும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும்.

இந்த காரணங்களால் ஆசஸ் தொடரில் நாளைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா அதிரடி இங்கிலாந்தை வீழ்த்தி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைக்குமா? என்று பார்க்க வேண்டும்!